குடையும், தண்ணீரும் தயாரா? அடுத்த 4 நாளுக்கான வெயில் நிலவரம் இதோ..
பங்குனி வெயில் பளபளக்கத் தொடங்கிவிட்டதால் குடையும், தண்ணீரும் கட்டாயமாகிவிட்டது. சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த சில தினங்களுக்கான வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பும் அதையே உணர்த்துகிறது.
பங்குனி வெயில் பளபளக்கத் தொடங்கிவிட்டதால் குடையும், தண்ணீரும் கட்டாயமாகிவிட்டது. சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த சில தினங்களுக்கான வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பும் அதையே உணர்த்துகிறது.
சென்னை வானிலை மைய முன்னறிவிப்பில்வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 24.03.2022, 25.03.2022 தேதிகளில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
அதேபோல் 26.03.2022, 27.03.2022 ஆகிய தேதிகளில், தமிழகம் , புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
வியர்க்குமே..!
இன்றைக்கு பகல் முழுக்க வெளியில் வேலை பார்த்தவர்களை வெயில் ஒரு பதம் பார்த்திருக்கும். அட ஆமாங்க அதைத் தான் வானிலை ஆய்வு மையமும் சொல்கிறது. இன்று (மார்ச் 23) எப்படி வெயில் பிளந்து கட்டியதோ அதே போல் நாளையும் (மார்ச் 24) வெயில் கடுமையாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னைவாசிகளே இது உங்களுக்காக..
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தவிர நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாம். குடை எப்படியும் உங்களுகுக் கட்டாயம். நாளைய தின, அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். அப்பப்பா 36 டிகிரியா என்று திகைத்தது போதும். தண்ணீர் பாட்டிலை மறந்துவிடாதீர்கள்.
மழையும் பெய்திருக்கிறது:
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தாலும் கூட வெப்பச்சலனத்தால் ஆங்காங்கே மழையும் பெய்திருக்கிறது. இதற்குக் காரணம் நேற்று காலை 8.30 மணி வரையில் வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில்ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவியது. இது வலுப்பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது அப்படியே வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. பின்னர் மியான்மர் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்தது. இந்நிலையில் அந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (மார்ச் 23) காலை 0530 மணி அளவில் மியான்மர் கடற்கரையை கடந்தது. இதனால் ஆங்காங்கே மழை பூமியை சந்தித்துச் சென்றது.
பொதுவாகவே வானிலை முன்னறிவிப்புடன் மீனவர்களுக்கான எச்சரிக்கையும் வரும். ஆனால், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் அவ்வாறு ஏதும் குறிப்பிட்ட எச்சரிக்கை மீனவர்களுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.