Subbu Arumugam: வில்லிசையை உலகெங்கும் எடுத்துச்சென்ற கலைஞர் சுப்பு ஆறுமுகம் மரணம்!
தமிழக அரசின் ‘கலைமாமணி’, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, கடந்தாண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இவர் வில்லிசை மகாபாரதம், நீங்களும் வில்லுப்பாட்டு பாடலாம், வில்லிசை இராமாயணம் ஆகிய 3 நூல்களை எழுதியுள்ளார்.
வயது முதிர்வு காரணமாக பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் 1928 ஆம் ஆண்டு பிறந்த சுப்பு ஆறுமுகத்துக்கு ராம அய்யர், நவநீத கிருஷ்ணபிள்ளை ஆகிய இரு ஆசிரியர்களும் தமிழ் ஆர்வத்தை விதைத்தனர். தனது தந்தை சுப்பையா பிள்ளையிடம் இருந்து சங்கீத ஞானத்தைப் பெற்ற சுப்பு ஆறுமுகம் தன்னுடைய 14வது வயதிலே "குமரன் பாட்டு" என்ற கவிதைதொகுப்பை வெளியிட்டு பிரபலமடைந்தார்.
The legend, who was synonymous with #Villupaatu #SubbuArumugam Ayya is no more..
— Thimiru Pudichavan Gokul. (@GokulThimiru) October 10, 2022
He was 93..
A Big loss to Tamil Nadu and Tamil Musical world..
RIP! pic.twitter.com/qpQPRxfjto
மதுரை தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பில் மூன்று ஆண்டுகள் படித்துத் தமிழ் மொழியில் புலமை பெற்று விளங்கிய அவரை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வில்லிசைக்கும், திரைப்படங்களில் திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதவும் சென்னைக்கு அழைத்து வந்தார். சுப்பு ஆறுமுகத்தை தனது வீட்டிலேயே தங்க வைத்து கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை வில்லுப்பாட்டாக்கிப் பாடினார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 19 திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேஷின் 60 திரைப்படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளையும் சுப்பு ஆறுமுகம் எழுதியுள்ளார். 1948 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது 74 ஆண்டுகள் பயணத்தில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கலைவாணர் மறைவுக்குப் பின் வில்லிசையின் மகத்துவத்தை உலகமெங்கும் எடுத்துச் சென்றார். காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை எழுதி நடத்தியுள்ளார்.
திருவையாறு தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் 145 வருடத்தில் இல்லாத வகையில் தியாகப் பிரம்மத்தைப் பற்றி தமிழில் சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டில் கதை நிகழ்த்தினார்.தமிழக அரசின் ‘கலைமாமணி’, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, கடந்தாண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இவர் வில்லிசை மகாபாரதம், நீங்களும் வில்லுப்பாட்டு பாடலாம், வில்லிசை இராமாயணம் ஆகிய 3 நூல்களை எழுதியுள்ளார்.
இவரது மகள் பாரதி, மருமகன் திருமகன், பேரன் கலைமகன் ஆகியோர் வில்லிசைப் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். ஒரு பேட்டியில் கூட நமது பாரம்பரிய இசையான வில்லிசையின் பக்கம் இன்றைய இளைஞர்களின் பார்வை திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் மகளுடன் வசித்து வந்த சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக தனது 94 வயதில் உயிரிழந்தார். சுப்பு ஆறுமுகத்தின் மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.