TN Export Promotion: ஏற்றுமதி மேம்பாட்டு குழுவை அமைத்த தமிழ்நாடு அரசு... என்ன செய்யும் இந்த குழு?
இந்தக் குழு குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும். 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு தலைவருக்கு அறிக்கைகளை அளிக்கும்.
தமிழ்நாட்டில் ஏற்றுமதியை மேம்படுத்த மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' மாநாட்டினை நேற்று துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த, மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் ‘மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு’ (State Export Promotion Committee) அமைக்கப்படும்” என்று கூறியிருந்தார். அதன்படி, தலைமைச்செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாடு குழு அமைத்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. ‘நிதி, தொழில், வேளாண், கால்நடைத்துறை செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஏற்றுமதி சங்கங்கள் பிரதிநிதித்துவத்தை அளிக்கும் வகையில் குழுவானது மறுசீரமைப்பு செய்யும். இந்தக் குழு குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும். 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு தலைவருக்கு அறிக்கைகளை அளிக்கும். மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைப்பின் தலைவராக தலைமைச் செயலாளர் இருப்பார். தொழில்துறையின் செயலாளர் தலைமையிலான ஒரு நிர்வாக துணைக்குழுவும் செயல்படும்’ என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
வளமும் வளர்ச்சியும் கொண்ட தமிழ்நாட்டினை உருவாக்க கழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இன்று, 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' மாநாட்டினைத் துவக்கி வைத்தேன்.
— M.K.Stalin (@mkstalin) September 22, 2021
நமது பொருட்களை உலகெங்கும் கொண்டு செல்வோம்; உலக நாடுகளை தமிழ்நாடு நோக்கி வர வைப்போம்! pic.twitter.com/SzTitdP0wo
முன்னதாக இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “Made in India போன்று Made in Tamil Nadu என்ற குரல் உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வோம். உலக நாடுகளை தமிழ்நாடு நோக்கி வர வைப்போம். ஏற்றுமதியில் ஏற்றம் காண்போம். முன்னேற்றப் பாதையிலேயே எப்போதும் நடப்போம். தொழில் வளர்ச்சி என்பது ஒரு மாநிலத்தின் வளர்ச்சி - இந்த நாட்டின் வளர்ச்சி. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது இந்தியா முழுமைக்குமான பரந்த வளர்ச்சியாக - உலகம் முழுவதும் பரவிய வளர்ச்சியாக இருந்தது. அத்தகைய தமிழ்நிலத்தின் பழம்பெருமையை மீட்டாக வேண்டும். தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டில் 24 தொழில் நிறுவனங்களுடன் ரூ.2,120.54 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது;இதன் மூலமாக 41,695 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, ஏற்றுமதியாளர்களுக்கும் - முதலீட்டாளர்களுக்கும் திமுக அரசு எந்த நிலையிலும் உறுதுணையாக நிற்கும். தமிழ்நாடு ரூ.1.93 இலட்சம் கோடி ஏற்றுமதி செய்து இந்தியாவிலேயே 3-வது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்கி வருகிறது. 2020-21ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் தமிழ்நாட்டின் ஏற்றுமதிப் பங்களிப்பு 8.97 விழுக்காடு. தமிழ்நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த, மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் ’மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு’ (State Export Promotion Committee) அமைக்கப்படும். இந்தியாவிலேயே முதன்முறையாக, தென் தமிழ்நாட்டின் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட ‘சர்வதேச அறைகலன் பூங்கா’ (International Furniture Park) ஒன்று தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் தொழில்துறை பெருமை என்பது,ஆடை மற்றும் அணிகலன்கள் ஏற்றுமதியில் 58% பங்களிப்பு. காலணி ஏற்றுமதியில் 45% பங்களிப்பு.மின்னணு இயந்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் 25% பங்களிப்பு. அனைத்து மாவட்டங்களிலும் ‘மாவட்ட ஏற்றுமதி மையங்கள்’ உருவாக்கப்பட்டு, அந்தந்த மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தனித்துவம் வாய்ந்த பொருட்கள் உலக அளவில் சந்தைப்படுத்தப்படும்” என்றார்.
இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:
வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?
கோயில் நிலத்தில் கிஷ்கிந்தா தீம் பார்க்?
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி
அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!
மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?
மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?