Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இன்று சென்னையில் நடந்த ‘வெல்லும் தமிழ் பெண்கள்‘ நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் வழங்கப்படும் தொகை ஒரு தொடக்கம் தான், அது மேலும் உயரும் என தெரிவித்தார்.

சென்னையில் இன்று நடைபெற்ற ‘வெல்லும் தமிழ் பெண்கள்‘ நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உயரும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த திட்டத்தின் பயனாளிகள் தற்போது 1.30 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், முதலமைச்சர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
கடந்த 2021-ம் ஆண்டு, சட்டமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பாட்டிற்கு கொண்டுவந்தார். இந்த திட்டத்திற்காக, 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 14-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அப்போது, சுமார் 1.63 கோடி பெண்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
அதில் தகுதியின் அடிப்படையில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டனர். இந்த திட்டத்திற்கு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்று தமிழக அரசு பெயர் சூட்டியது. தொடர்ந்து, இந்த திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டனர்.
அரசின் கணக்கீட்டின்படி, சுமார் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்களுக்கு 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக இதுவரை மொத்தம் 30 ஆயிரத்து 838 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மகளிர் உரிமைத்தொகை பெற பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்தனர்.
அதில் தற்போது, 17 லட்சம் பெண்கள் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ் பெண்கள்‘ விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, மகளிர் உரிமை விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்காக, இன்றே மகளிர் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதன் மூலம், தமிழ்நாட்டில் தற்போது கலைஞர் உரிமைத்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831-ஆக உயர்ந்துள்ளது.
உரிமைத் தொகை மேலும் உயரும் - மு.க. ஸ்டாலின்
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரலாற்றை திருத்தி எழுதும் திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமைந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். ஒரு திட்டத்தின் வெற்றி என்பது, பயனாளிகள் அதை எவ்வாறு பயன்படுத்தி தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள் என்பதில் தான் உள்ளது என்று கூறிய முதலமைச்சர், அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், அண்டை மாநிலங்கள் கூட தங்கள் மாநிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் வெற்றி என அவர் குறிப்பிட்டார். மகளிர் நலத் திட்டங்களை இலவசம் என்று கூறி கொச்சைப்படுத்தியவர்கள் கூட, இந்த திட்டத்தை அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்திவிட்டதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, புதுச்சேரி, கர்நாடகா, ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் என 10 மாநிலங்களில் இந்த உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தலைநிமிரும் தமிழ்நாட்டில் பெண்கள் தலைநிமிர்ந்து நடைபோட, நிச்சயம் உரிமைத் தொகையும் உயரும், பெண்களுடைய உரிமையும் உயரும் என்று தெரிவித்தார்.





















