ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
தமிழ்நாட்டில் அதிமுக-வுடன் பாஜக கூட்டணி வைத்துள்ள சூழலில், கூட்டணி இன்னும் வலுவாகதது அமித்ஷாவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாத காலத்திற்குள் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் அதற்கான பணிகளில் தீவிரமாக உள்ளனர். ஆளுங்கட்சியான திமுக-வைத் தவிர மற்ற கட்சிகளில் இன்னும் கூட்டணி வலுவாக அமையவில்லை.
அதிமுக கூட்டணி:
திமுக-வின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக -வின் கூட்டணியில் பாஜக, தமாக - தவிர எந்த கட்சியும் இல்லை. ஏற்கனவே பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறிவிேட்டனர். அதிமுக-வுடன் கரம் கோர்த்துள்ள பாஜக வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வலுவாக காலூன்ற வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, ம.நீ.ம. என வலுவான கூட்டணியை கொண்ட திமுக-விற்கு எதிராக இன்னும் அதிமுக வலுவான கூட்டணியை அமைக்காதது அமித்ஷாவிற்கு தலைவலியாக அமைந்துள்ளது.
கூட்டணி பஞ்சாயத்து:
அதிமுக-விற்குள்ளே ஏற்பட்ட உட்கட்சி மோதல், இன்னும் பாமக, தேமுதிக ஆகியோர் கூட்டணிக்குள் வராதது அமித்ஷாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் அவரது தமிழக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேமுதிக ரெடி:
அடுத்தாண்டு தங்களது கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக அறிவித்துள்ள தேமுதிக, தற்போது அதிமுக பக்கம் சாய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க அதிமுக தயாராக இருப்பதால் தேமுதிக கூட்டணிக்கு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் எதிரொலியாகவே சமீபத்தில் பேட்டி அளித்த பிரேமலதா, அதிமுக மாநிலங்களவை பதவி தருவதாக கூறி எங்களை ஏமாற்றவில்லை. 2026ல் தருவதாக கூறினர் என்று பேட்டி அளித்தார். இதனால், தேமுதிக அதிமுக பக்கம் சாய்ந்துவிடும் என்று கருதப்படுகிறது.
ராமதாஸ் - அன்புமணி சண்டை:
ஆனால், வட தமிழகத்தில் மிகப்பெரிய வாக்கு வங்கியை வைத்துள்ள பாமக தந்தை -மகன் சண்டையால் மிகப்பெரிய பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. அன்புமணி அதிமுக - பாஜக கூட்டணிக்கு தயாராக உள்ள நிலையில், ராமதாஸோ திமுக கூட்டணியில் இடம்பெற ஆர்வம் காட்டி வருகிறார். இவர்களது தந்தை - மகன் சண்டையால் பாமக-வின் மாம்பழம் சின்னம் முடங்கும் அபாயம் உண்டாகியுள்ளது.
மேலும், தனக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வத்தையும், கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரனையும் கூட்டணிக்குள் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து சரமாரியாக விமர்சித்து வரும் தினகரன் அவரை கூட்டணித் தலைவராக ஏற்பாரா? என்பது கேள்விக்குறியாக மாறி நிற்கிறது.
அமித்ஷாவிற்கு தலைவலி:
கூட்டணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடனே கூட்டணி என்று விடாப்பிடியுடன் உள்ளார். பல சவால்கள் அதிமுக கூட்டணியில் இருப்பதால் தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அமித்ஷாவிற்கு மிகப்பெரிய தலைவலியை உண்டாக்கியுள்ளது.





















