’மக்களை வளர்க்கவும் மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி; 4 வருஷமா இதைதான் செய்யறோம்’- முதல்வர் ஸ்டாலின்!
மக்களான உங்களை மகிழ்விக்கவே இந்த ஆட்சி. மக்களைக் காக்கவே இந்த ஆட்சி. மக்களை வளர்க்கவும் மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி- முதல்வர் ஸ்டாலின்.

தென்காசி மாவட்டத்தில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
’’வடக்கே காசி என்றால் தெற்கே ஒரு தென்காசி. தூறலும் சாரலும் கொண்டு மக்களைக் குளிர்விக்கும் மண் தென்காசி மண்.
நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்
நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர். இதுவரை 10 லட்சத்து 26,743 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. தற்போது கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் ஒரு லட்சமாவது வீடு இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது. புதிதாக 9 லட்சம் முதியோர்களுக்கு, முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு உள்ளது.
மக்களை வளர்க்கவும் மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி
மக்களான உங்களை மகிழ்விக்கவே இந்த ஆட்சி. மக்களைக் காக்கவே இந்த ஆட்சி. மக்களை வளர்க்கவும் மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி. இந்த நான்கையும் நான்கு ஆண்டு காலமாக செய்து கொண்டிருக்கிறோம். எப்போதும் உங்களை நினைத்துக்கொண்டே இருப்பதால்தான் மக்களாகிய நீங்கள், எங்களுடன் இருக்கிறீர்கள். நமக்கிடையே உள்ள இந்த நெருக்கம், சிலரைத் தூங்க விடாமல் செய்கிறது.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் விரக்தியின் உச்சிக்கே சென்று பேசிக்கொண்டு இருக்கிறார். நெல் கொள்முதல் விவகாரத்தில் தவறான தகவல்களைக் கூறி வருகிறார். அவரிடம் பொய்யையும் துரோகத்தையும் தவிர எதையும் எதிர்பார்க்க முடியாது’’.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.























