சன் ஃபார்மா மருந்து ஆலை சுற்றுச்சூழல் அனுமதி வாங்காமல் செயல்பட்டதில் தவறில்லை : நிபுணர் குழு
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே இயங்கி வரும் சன் ஃபார்மா மருந்து ஆலை, சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் செயல்பட்டதில் தவறில்லை என நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய எல்லையில் இயங்கி வரும் சன் ஃபார்மா மருந்து ஆலை நிறுவனம் சுற்றுச் சூழல் அனுமதி பெறாமல் இயங்கியதில் தவறில்லை என நிபுணர் குழு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரியின் எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இயங்கி வரும் சன் பார்மா எனும் மருந்து உற்பத்தி நிறுவனம், தனது உற்பத்தி மையத்தை விரிவாக்க, சுற்றுச்சூழல் மற்றும் தேசிய வனவுயிர் வாரிய அனுமதிகோரி கடந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தது. அதே நேரத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பரப்பளவை 5 கிலோமீட்டரிலிருந்து 3 கிலோ மீட்டராக சுருக்குவதற்கு தமிழக வனத்துறை விண்ணப்பித்திருந்தது. சன் பார்மா தனது உற்பத்தி நிறுவனத்தை விரிவுப்படுத்த ஏதுவாக வேடந்தாங்கல் சரணாலய பரப்பளவை குறைக்க தமிழக வனத்துறை முடிவெடுத்திருப்பதாக சூழலியல் அமைப்புகள் குற்றஞ்சாட்டியிருந்தன.
இந்நிலையில், இந்த மருந்து உற்பத்தி ஆலையானது மத்திய சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகவும், இவ்வளவு ஆண்டுகளாக இந்த ஆலையை செயல்பட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மருந்து ஆலையால் நீர்நிலைகளுக்கு மாசு ஏற்பட்டுள்ளதால், வேடந்தாங்கல் ஏரியை பராமரிக்க நிரந்தரமாக நிபுணர் குழுவை ஏற்படுத்தி, மருந்து ஆலையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு உரிய இழப்பீட்டை பெற வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் எம் ஆர் தியாகராஜன் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு, சன் பார்மா மருந்து ஆலை உரிய அனுமதி பெறாமல் இயங்கி வருகிறதா? ஆலையை சுற்றியுள்ள நீர்நிலைகளுக்கு மாசு ஏற்பட்டுள்ளதா என்பதையும் ஆராய்ந்து விரிவான அறிக்கை சமர்பிப்பதற்காக நிபுணர்குழுவை ஏற்படுத்தியது. இந்த குழுவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு வனத்துறை, மத்திய சுற்றுச்சூழல் துறையின் தென் மண்டல பிரிவு அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். இந்த வழக்கில் நிபுணர் குழுவானது தனது அறிக்கையை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்துள்ளது.
அதில் சன்பார்மா ஆலையானது 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாவும் 1994ஆம் ஆண்டுதான் சுற்றுச்சூழல் தாக்க மதிபீட்டு அறிவிக்கை உருவாக்கப்பட்டது என்பதால் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் இருந்து விலக்களிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆலை விரிவாக்கம் செய்யப்படுவதால் புதிதாக சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியமாகிறது என்றும் 1992ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடுமாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெற்றே சன் பார்மா ஆலை இயங்கி வந்ததாகவும், இதுவரை சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் செயல்பட்டதில் குற்றமில்லை எனவும் நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேபோல், நீர் மாசுபாட்டை பொறுத்தளவில் ஆலையின் செயல்பாட்டால் வேடந்தாங்கல் ஏரி மற்றும் அருகிலுள்ள பிற ஏரிகளுக்கு பாதிப்பில்லை என தங்களது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், ஆனால், ஆலை வளாககத்தினுள் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் Toluene, Chlorobenzene, M-Xylene and Naphthalene போன்ற இரசாயனங்கள் காணப்பட்டதால் நிலத்தடி நீர் மாசடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாசுபாட்டிற்கு இழப்பீடாக 58 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை நிறுவனத்திடமிருந்து பெற வேண்டும் என்று நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், சன்பார்மா ஆலையானது வேடந்தாங்கல் ஏரியிலிருந்து 3.7 கிமீ தொலைவில் இருப்பதால், ஆலையின் விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்க கூடாது என்றும், இப்போது செயல்பட்டு வரும் மருந்து ஆலையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழலை காக்க தீவிரமான முன்னெடுப்புகளை எடுத்துவரும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, சுற்றுச்சூழல் அனுமதி வாங்காமல் சன்பார்மா ஆலை செயல்பட்டதில் தவறில்லை என்று நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்திருப்பது மிக மிக தவறானது. ஒரு மருந்து ஆலை எந்த அளவுக்கு சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் என்பது சாதாரண மனிதருக்கு கூட தெரியும். ஆனால் இது நிபுணர் குழுவிற்கு இது தெரியாமல் இருப்பதுதான் ஆச்சரியம் அளிக்கிறது. சுற்றுச்சூழல் அனுமதி வாங்காமல் ஒரு ஆலை செயல்பட்டதில் தவறில்லை என்று அறிக்கை கொடுத்தால் அது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். சுற்றுச்சூழல் அனுமதி ஏன் வாங்கச் சொல்கிறோம் என்றால், அந்த ஆலையில் என்ன மாதிரியான ரசாயனங்கள் பயன்படுத்துகின்றார்கள் என்பதையும், அந்த பகுதியில் காற்று மாசு, நீர் மாசு உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்வார்கள். அப்படி ஆய்வு செய்யும்போதுதான் ஓர் ஆலை சுற்றுச்சூழலுக்கு எந்த அளவுக்கு தீங்காக செயல்பட்டு வருகிறது என்பதை கண்டறிய முடியும். இப்படி அனுமதியே வாங்காமல் செயல்படுவது என்பது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய கேட்டை உருவாக்கிவிடும். அதுவும் பறவைகள் சரணாலயம் உள்ள பகுதியில் இதுபோன்ற மருந்து ஆலை செயல்பட அனுமதிக்கவே கூடாது என்றார்.
சூழலியல் ஆர்வலர்களின் இந்த குற்றச்சாட்டு குறித்து நிபுணர் குழு பதில் அளிக்கும்பட்சத்தில் அந்த விளக்கமும் பிரசுரிக்கப்படும்.