TKS Nadarajan passes way: காலமானார் நடிகரும், பாடகருமான TKS நடராஜன்!
நடிகரும், தெம்மாங்கு பாடகருமான " TKS நடராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 87.
என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி" பாடலின் மூலம் புகழ்பெற்ற பாடகர் TKS நடராஜன். சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்த நடராஜன், தெம்மாங்கு பாடகராவார். நாடகத்துறையில் கொடிக்கட்டிப்பறந்த டிகேஎஸ் கலைக்குழுவில், சிறுவனாக இருந்த போது நடராஜன் சேர்ந்து நடித்தார். அதனால் அவர் டிகேஎஸ். நடராஜன் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.
சிறு வேடங்கள் என்றாலும் நடராஜன் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1954 இல் வெளியான ரத்தபாசம் படத்தில் டிகேஎஸ் நடராஜன் திரைப்பட நடிகராக அறிமுகம் ஆனார். அதன்பின் நாடோடி, நீதிக்கு தலைவணங்கு, பொன்னகரம், தேன் கிண்ணம், கண்காட்சி, பகடை பனிரெண்டு, ராணி தேனீ, ஆடு புலி ஆட்டம், பட்டம் பறக்கட்டும், மங்களவாத்தியம், உதயகீதம், ஆனந்த கண்ணீர் , இதோ எந்தன் தெய்வம், காதல் பரிசு போன்ற 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி" பாடலின் மூலம் மக்களுக்கு நெருக்கமான நடராஜன் அதன் பின்னர் பல கச்சேரிகளில் தன் குரலை பதிவு செய்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார் நடராஜன். அவரது இறுதிச்சடங்கு சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடராஜனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடராஜன் பாடிய என்னடி முனியம்மா பாடல், சமீபத்தில் ரீமேக் செய்யப்பட்டு, அதிலும் அவரே நடித்திருந்தார். அர்ஜூன் நடித்திருந்த அந்த பாடல் காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றது. இதே போல வருஷம் 16 திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் வந்திருந்தாலும், அவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. கங்கைக் கரை மன்னனடி பாடல் தான் அதற்கு சரியான உதாரணம்.
நடிகர் கார்த்திக்கு பதிலாக குஷ்பு தரப்பிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட பாடகராக வரும் நடராஜனை மேடையில் ஏற விடாமல், கார்த்திக் தரப்பு செய்யும் கலாட்டா தான் அந்த படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று. இன்றும் வருஷம் 16 படத்தை பார்ப்பவர்கள், அந்த காட்சியை விட்டு விலகிச் செல்ல முடியாது. பாடகர் என்றாலே இவர் என்கிற அளவில் அவரது கதாபாத்திரம் பொருந்தியிருக்கும்.
பெரும்பாலும் நலினம் கொண்ட கேலி கதாபாத்திரங்களின் தான் நடராஜன் நடித்திருப்பார். அவ்வளவு தத்ரூபமாக அது அவருக்கு பொருந்தியிருக்கும். இன்னும் சொல்லப்போனால் அது அவருடைய அடையாளமாகவும் மாறிவிட்டது. 80 களில் வலம் வந்த பல குணசித்திர நடிகர்களில் நடராஜனும் குறிப்பிடத்தக்கவர். சமீபமாக சினிமாத்துறையில் பெரிய அளவில் பங்களிப்பு இல்லாமல் ஒதுங்கியிருந்த நடராஜன், வயது மூப்பு காரணமாக திடீரென உயிரிழந்தது, சினிமா ரசிகர்களுக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. காலத்தால் அழியாத அவரது படைப்புகள் என்றும் வாழும்.