(Source: ECI/ABP News/ABP Majha)
’அரசு பள்ளியில் படித்து ஐபிஎஸ் ஆன சைலேந்திரபாபு’ தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக நியமனம்..!
போலீஸ் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற உடற்கட்டு, உற்சாகம், கனிவு, கம்பீரம் என எடுத்துக்காட்டாக விளங்கும் சைலேந்திரபாபு ஐபிஎஸ்.
உடலினை உறுதி செய், இலக்கினை இறுதி செய் என நாள் தோறும் இளைஞர்களுக்கு தனது வீடியோ மூலமும், நிகழ்ச்சிகள் வாயிலாகவும் உற்சாகம் ஊட்டி வரும் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்தான் தற்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வாழ்க்கையில் பதில்களை விட கேள்விகள் மிக முக்கியமானது. கேள்விகள்தான் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கி வரும் சைலேந்திரபாபு தமிழ்நாட்டின் கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரியின் குழித்துறை கிராமத்தில் பிறந்தவர்.
அரசு பள்ளி மாணவர் என்றாலே அலட்சியமாக பார்த்த காலத்தில் அதேபோன்றதொரு அரசு பள்ளியில் படித்து ஐபிஎஸ் ஆனவர். அரசு பள்ளியில் படித்தால் ஐபிஎஸ் ஆக முடியாதா என்ன ? நாட்டின் குடியரசுத் தலைவராக கூட ஆகலாம் என்று கிராம புற மாணவர்களின் கனவுகளுக்கு கலங்கரை விளக்கம் என இருப்பவர்.
இளம் வயதில் மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்ட சைலேந்திரபாபுவுக்கு அப்போது நடந்த நேர்காணல் தேர்வு தடையை ஏற்படுத்தியது. கிடைக்காததை நினைத்து வருத்தப்படவில்லை அவர், தன்னுடைய இலக்கை இன்னும் விரிவாக்கினார். தடை அதை உடை என்று அவர் இப்போது பேசுவதற்கு, அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களே மேடையில் மைக் எடுத்துக்கொடுக்கின்றன.
மதுரை வேளாண் கல்லூரியில் இளங்கலை படிப்பும், கோவை வேளாண் கல்லூரியில் முதுகலை படிப்பும் படிக்கும் நேரத்தில், தேசிய மாணவர் படை என்னும் NCC-க்கு மாணவர் தலைவராக இருந்தார். அப்போதே அந்த காக்கி சிரூடை மீது காதல் ஏற்பட்டது அவருக்கு. அக்ரி படித்த மாணவர்கள் விவசாயம் சார்ந்த வேலையில்தான் ஈடுபடவேண்டுமா என்ன என தோன்றிய அவருக்கு, இப்படி எண்ணம் ஏற்பட காரணம் வேளாண்மை படித்த பலர் அப்போது ஐஏஎஸ் தேர்வு எழுத ஆயத்தமானதும், ஐ.ஏ.எஸ் ஆனதும்தான். குறிப்பாக தமிழ்நாட்டின் தலைமைச்செயலாளராக இருந்த சண்முகம், வி.கே.சுப்புராஜ் போன்றோர், அக்ரி படித்துவிட்டு ஐ.ஏ.எஸ் ஆனவர்கள்தான்.
ஆனால், சைலேந்திரபாபுவால் முதல் முயற்சியிலேயே ஐபிஎஸ் ஆகிவிடமுடியவில்லை. வங்கியில் அதிகாரியாக வேலை கிடைத்தது ; அதில் திருப்தி இல்லை அவருக்கு. காக்கி உடை மீது காதல் கொண்டவரால் கணினி முன் உட்கார்ந்து வேலை பார்க்க முடியுமா என்ன ? மீண்டும் முயன்றார், IFS என்ற இந்திய வெளியுறவுத் துறை முதல் சாய்சாக கிடைத்தது. அதிக சம்பளம், சொகுசு வேலை, பல்வேறு நாடுகள் பயணம் என்பதெல்லாம், ஒரு தேர் போல அவர் கண் முன் பவனி வந்தது, கரையவில்லை அவர். அதனை ஒதுக்கித் தள்ளினார். அடுத்த சாய்சாக இருந்த IPS என்ற காக்கியை தேர்வு செய்தார். ஒரு காக்கிச் சட்டை உரசலில் ஐஏஎஸ் எடுக்கச் சென்ற விக்ரம் ஐபிஎஸ்சை, தேர்வு செய்வாரே சாமி படத்தில் அதே போன்றதொரு அனல்பறக்கும் சீன்தான் சைலேந்திரபாபுவின் உண்மை வாழ்கை.
வேளாண்மையில் முதுகலை, MBAவில் - HR, குற்றத் தடுப்பு, காணாமல் போகும் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், IPS ஆனதும் முதலில் தருமபுரியில் ASP ஆக தனது பணியை தொடங்கினார், பின்னர், கோபிசெட்டிபாளையம், திண்டுக்கல், சேலம் போன்ற பகுதிகளில் பணியாற்றி, கடந்த 1992ல் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம், சிவகங்கை, கடலூர் மாவட்டங்களில் பணி செய்தார். அப்போது குற்றங்கள் தடுப்பு, பொதுமக்களின் குறைகள் களைதலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் மக்களிடையே வெகுவாக பாரட்டப்பட்டார். ASP ஆனது முதலே ஊக்க உரை கொடுக்கத் தொடங்கிய சைலேந்திரபாபு, இப்போது கூட முகநூலிலோ அல்லது எங்கேயோ யாருக்கோ ஊக்க உரை கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்.
2001ல் டிஐஜி, 2007-ல் ஐஜி, 2012-ல் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, சிறைத்துறையில் பணியாற்றினார். 2019ல் டிஜிபி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட சைலேந்திரபாபு ரயில்வே டிஜிபி, தீயணைப்புத் துறை டிஜிபி போன்ற முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றி பல்வேறு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்தவர். 1997-ல் பிரதமர் விருது, 2004 சிறப்பு அதிரடிப்படைக்கான வீரத் தீர விருது, 2005, 2013ல் காவல்துறைக்கான குடியரத் தலைவர் விருது, 2019-ல் முதலமைச்சர் விருது என ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் கண்டார்.
நீங்களும் ஐபிஎஸ் அதிகாரி ஆகலாம், சாதிக்க ஆசைப்படு, உடலினை உறுதி செய், அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும், உனக்குள் ஒரு தலைவன், ஏ கைட் ஆப் ஹெல்த் அண்டு ஹாப்பினஸ் என்று 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
போலீஸ் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற உடற்கட்டு, உற்சாகம், கனிவு, கம்பீரம் என எடுத்துக்காட்டாக விளங்கும் சைலேந்திரபாபு ஐபிஎஸ், தனது 50 வயதிற்கு பிறகு கூட 50க்கும் மேற்பட்ட ஹால்ப் மராத்தான் ஓடியவர், ஓடிக்கொண்டிருப்பவர்.
அதுமட்டுமின்றி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம், இந்தியா முதல் இலங்கை வரை நீச்சல் என எப்போது எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருப்பவர். தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த அடுத்த நிமிடம் முதலே சைலேந்திரபாபுதான் டிஜிபியாக வரவேண்டும் என சமூக வலைதளங்களில் சண்டமாருதம் செய்தார்கள் அவர் மீது அன்புகொண்டவர்கள்.
அவர்கள் எதிர்பார்த்தப்படியே அறிவிப்பும் வந்திருக்கிறது. இனியாவது, சாமானியர் மீதான தாக்குதல், சட்டத்தை மீறிய கட்டப்பாஞ்சாயத்து, பணம் படைத்தவர்களுகென்ற தனி நியாயம் இல்லாத காவல்துறையை சைலேந்திரபாபு உருவாக்குவார், சட்டம் ஒழுங்கை சரியாக நிலைநாட்டுவார் என்று நம்புவோம் !