2 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சூப்பரான அறிவிப்பை சொன்ன போக்குவரத்து துறை
Week End Holiday Bus: விடுமுறை என்றாலே மாணவர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் துள்ளி குதிப்பார்கள். எனவே வார விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வார விடுமுறை கொண்டாட்டம்
வார முழுவதும் இயந்திரங்களுக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான், அந்த நாட்களில் நிம்மதியாக ஓய்வு எடுப்பது, நண்பர்களோடு வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வது, உறவினர்கள் வீட்டிற்கு செல்வது என அந்த நாட்களை கழிப்பார்கள். எனவே வெளியூர்களுக்கு செல்ல திட்டமிடும் நேரத்தில் ரயில் மற்றும் பேருந்துகளில் இடம் இல்லாத நிலையும் நீடிக்கும். இதனால் வெளியூர்களுக்கு பயணம் செய்யும் நிகழ்வுகளை தள்ளிப்போடும் நிகழ்வும் நடைபெறும். இந்த நிலையில் தான் வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி சென்னையில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இது தொடர்கபாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக இயக்குநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிறப்பு பேருந்து அறிவிப்பு
நாளை 12/12/2025 (வெள்ளிக்கிழமை) 13/12/2025 (சனிக்கிழமை) மற்றும் 14/12/2025 (ஞாயிறுக் கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ள அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஏற்கனவே இயக்கும் பேருந்துகளோடு சேர்த்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 12/12/2025 (வெள்ளிக் கிழமை) அன்று 55 பேருந்துகளும் 13/12/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து
இதே போல சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 12/12/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 320 பேருந்துகளும், 13/12/2025 (சனிக்கிழமை) 310 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதாவரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாளை 12/12/2025 மற்றும் நாளை மறுதினம் 13/12/2025 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தல்
வார விடுமுறை முடிவடைந்து ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை நாளை ( வெள்ளிக்கிழமை ) அன்று 7,838 பயணிகளும் நாளை மறு தினம் (சனிக்கிழமை )3,573 பயணிகளும் மற்றும் ஞாயிறுக்கிழமை அன்று 8,323 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக இயக்குநர் தெரிவித்துள்ளார்.





















