TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR Draft Roll Tamilnadu: வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை 3 வழிகளில் சரிபார்க்கலாம். எப்படி பார்ப்பது என்று கீழே காணலாம்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், எஸ்ஐஆர் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்த பிறகு, வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக வாக்காளர் சரிபார்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வழங்கப்பட்ட SIR விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய இரண்டு முறை கால அவகாசம் வழங்கப்பட்டது., கடந்த 14ஆம் தேதியோடு இறுதி நாள் நிறைவடைந்தது. இதனையடுத்து புதிய வாக்காளர் வரைவு பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை 3 வழிகளில் சரிபார்க்கலாம். எப்படி பார்ப்பது?
வாக்காளர்கள் முதலில் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
அதில், Search By EPIC, Search by Details, Search By Mobile ஆகிய 3 வழிகள் உள்ளன.
Search By EPIC
- இதில் வாக்காளர்களின் வாக்காளர் அடையா அட்டை எண்ணை (EPIC) உள்ளிட வேண்டும்.
- தொடர்ந்து மொழி, மாநிலம் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
- கேப்ட்ச்சாவை உள்ளிட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று சரிபார்க்கலாம்.
Search by Details
- இதிலும் மொழி, மாநிலம் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
- தொடர்ந்து வாக்காளரின் பெயர், உறவினரின் பெயர் (தந்தை அல்லது தாயின் பெயர்) ஆகியவற்றை வாக்காளர் அடையாள அட்டையில் இருப்பதுபோல் உள்ளீடு செய்ய வேண்டும்.
- தொடர்ந்து பிறந்த தேதி, பாலினம், மாவட்டம், தொகுதி ஆகியவற்றை உள்ளிட வேண்டியது முக்கியம்.
- பின்பு கேப்ட்ச்சாவை உள்ளிட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று சரிபார்க்கலாம்.
Search By Mobile
- மூன்றாவது வழியாக உங்களின் மொபைல் எண்ணை உள்ளிட்டும், வாக்காளர் பட்டியலில் நம் பெயர் உள்ளதா என்று அறியலாம்.
- எனினும் இதற்கு தேர்தல் ஆணையத்தின் தரவுகளில் மொபைல் எண் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டியது முக்கியம்.
பெயர் இல்லாவிட்டால் என்ன செய்வது?
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இல்லாவிட்டால் கவலை கொள்ள வேண்டாம். வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள புள்ளிவிவரங்கள் தற்காலிகமானவையே. படிவம் 6, படிவம் 8 ஆகியவற்றை தேவைக்கேற்றவாறு சமர்ப்பித்து, இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெறலாம். டிச.19-ம் தேதி முதல் ஐனவரி 18ம் தேதி வரை தங்களது படிவங்களைச் சமர்ப்பிக்கலாம்.
பெயர் சேர்த்தல், திருத்தல், ஆட்சேபனைகள் தொடர்பாக அனைத்து விண்ணப்பங்களும், பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் பிப்ரவரி 17ஆம் தேதி அன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.






















