கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்...உச்சக்கட்ட உட்கட்சி பூசலில் தமிழ்நாடு காங்கிரஸ்...!
ஒழுங்கு நடவடிக்கை பரிந்துரையின் பேரில், காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான ரூபி மனோகரன், கட்சியின் மாநில பொருளாளராகவும் உள்ளார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸில் இவர் நியமித்த நிர்வாகிகளுக்கு பதிலாக கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் புதிய நிர்வாகிகளை நியமித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வந்தது.
அதன் தொடர்ச்சியாக, ரூபி மனோகரன் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் ஜெயகுமாருக்கு எதிராக புகார் அளிக்க சென்று இருந்தார். அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காங்கிரஸ் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயகுமாரை மாற்றக்கோரி ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனில் முற்றுகையிட்டனர்.
நிர்வாகிகள் கூட்டத்துக்கு வந்த மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ். அழகிரியை ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் முற்றிகையிட்டதால் மோதல் வெடித்தது. போராட்டத்தை தூண்டி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், ஒழுங்கு நடவடிக்கை பரிந்துரையின் பேரில், காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதல் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதற்கு அவர் 15 நாள்கள் அவகாசம் கேட்டிருந்ததாகவும் அவர் அளித்த விளக்கம் ஏற்றதாக இல்லை எனக் கூறி அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி பகிர்ந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் என்பது புதிதல்ல. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு அதன் உட்கட்சி மோதலும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.
மூத்த அரசியல் தலைவர்களான மம்தா பானர்ஜி, சரத் பவார் ஆகியோர் எல்லாம் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதன் தலைமையுடன் மாற்று கருத்து கொண்ட காரணத்தால் கட்சியிலிருந்து வெளியேறி புது கட்சியை தொடங்கியவர்கள்.
காங்கிரஸில் உட்கட்சி மோதல் என்பது தற்போது வரை தொடர்ந்து வருகிறது. கேரளாவில் உம்மன் சாண்டி மற்றும் ரமேஷ் சென்னிதலா, கர்நாடகாவில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார், ராஜஸ்தானில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே மோதல் நிலவி வருகிறது.
இதில், தமிழ்நாட்டை பொறுத்தவரை, பல்வேறு பிரிவுகளாக கட்சி பிளவுண்டு இருக்கிறது. கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.எஸ். அழகிரி என பல தலைவர்களின் கீழ் தொண்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். கட்சியில் நிலவும் பிளவை எதிரொலிக்கும் வகையிலேயே, சமீபத்தில் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மோதல் வெடித்தது.