மேலும் அறிய
Advertisement
”மக்கள் கண்காணிப்பகம் மீது அடக்குமுறை நடக்கிறது” - வைகோ கண்டனம்
”பாஜக அரசின் அடக்குமுறைகளில் இருந்து சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும்”- வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
வைகோ தனது அறிக்கையில்...,”சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர் என்றான் பாரதி. ஆனால், உலகின் பல்வேறு திசைகளில் இருந்து இந்தியாவுக்கு, தமிழகத்திற்கு வந்த கிறித்துவப் பெருமக்கள், அடித்தட்டு ஏழை எளிய மக்களின் உடல் நலன் காக்க, அன்னைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள் நினைக்குந்தோறும் நெஞ்சு நெகிழச் செய்பவை. தமிழ்நாட்டில் மட்டும் அன்றி, கிறித்துவத் தொண்டு நிறுவனங்கள், இந்தியாவின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைத்த, மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், கடந்த 200 ஆண்டுகளாக ஏற்படுத்திய மாற்றங்களை அனைவரும் அறிவோம். அல்பேனிய நாட்டில் பிறந்த அன்னை தெரசா அவர்கள், இந்தியாவுக்கு வந்து கொல்கத்தாவில் அமைத்த ‘ மிசனரீஸ் ஆஃப் சேரிட்டீஸ்’ அறக்கட்டளை, இலட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவம் அளித்து இருக்கின்றது; அவரது நற்பணிகளைப் பாராட்டி, நோபெல் விருது வழங்கிச் சிறப்பித்தனர்; போப் ஆண்டவர், புனிதர் தகுதி வழங்கி மேன்மை செய்தார்; இந்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்கிப் பெருமை சேர்த்து இருக்கின்றது.
அத்தகைய பெருமை வாய்ந்த அறக்கட்டளை மட்டும் அன்றி, நாடு முழுமையும் சுமார் 6000 தொண்டு நிறுவனங்கள், அயல்நாடுகளில் இருந்து நன்கொடை பெற, ஒன்றிய பாஜக விதித்த தடை, இந்திய அரசு அமைப்புச் சட்டத்திற்கு, தான்தோன்றித்தனமான அடக்குமுறையே ஆகும். அமெரிக்க நாட்டின் முன்னணி ஆங்கில ஊடகங்கள், Crackdown on Christianity in India எனத் தலைப்பு இட்டுச் செய்திகள் எழுதின. இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், இந்திய அரசின் அடக்குமுறை நடவடிக்கை குறித்துத் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்; இதுகுறித்து, பிரித்தானிய அரசு, இந்திய அரசுடன் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இவை எல்லாம், இந்திய மக்கள் ஆட்சிக் கோட்பாட்டுக்கு, அரசு அமைப்புச் சட்டத்தின் மதச்சார்பு அற்ற தன்மைக்கு மாண்பு சேர்ப்பதாக இல்லை. இவ்வாறு, உலக அளவில் எழுந்த கண்டனங்களுக்குப் பிறகு, இந்திய அரசு, அன்னை தெரசா அறக்கட்டளைக்கு மட்டும், அயல்நாட்டு நன்கொடைகள் பெறத் தடை இல்லை என அறிவித்து இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்ற மக்கள் கண்காணிப்பகத்தின் சட்ட அமைப்பான சமூக சிந்தனை வளர்ச்சி மையம் (CPSC) மீது, ஒன்றிய அரசு 2012 ஆம் ஆண்டே இத்தகைய அடக்குமுறைகளை மேற்கொண்டது. அயல்நாடுகளில் இருந்து நிதிபெற 16.07.2012, 18.02.2013, 16.09.2013 ஆகிய நாட்களில் 3 முறை தடை விதித்தனர்; ஒவ்வொரு முறையும் 180 நாட்கள் தடை நீட்டிக்கப்பட்டது. அதனை எதிர்த்து மக்கள் கண்காணிப்பகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் விதித்த தடை செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து மக்கள் கண்காணிப்பகத்தின் (CPSC) வங்கிக் கணக்கைப் பயன்படுத்த அனுமதி அளித்தது. அதன்பிறகு, மீண்டும் 29.10.2016 ஆம் தேதி வெளிநாட்டில் நிதிபெறும் புதுப்பித்தலை மறுத்தனர். அப்போது மக்கள் கண்காணிப்பம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகவே, 2012 முதல் 2016 வரை சுமார் 2600 நாட்கள் தங்களின் வெளிநாட்டில் இருந்து நிதி வரும் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தாமலேயே செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால், எப்படியாவது மக்கள் கண்காணிப்பகத்தை முடக்கி விட வேண்டும் என்ற வெறியுடன், இப்போது, சிபிஐ அமைப்பின் மூலமாக அடுத்த மிரட்டல் விடுத்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக, அப்போது மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் பொறுப்பாளர்கள் மீது, பத்து ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டு, 06.01.2022 அன்று வழக்கு பதிவு செய்து இருக்கின்றார்கள். 07.01.2022 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் பிடி வாரண்ட் பெற்று 08.01.2022 அன்று மக்கள் கண்காணிப்பக அலுவலகத்திற்கு வந்து சோதனையிட்டுள்ளனர். மீண்டும் வருவோம் என்று கூறிச் சென்றுள்ளனர். இத்தகைய மிரட்டலுக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 1995 ஆம் ஆண்டு கொடியங்குளம் வன்முறையிலும், 1998 குண்டுப்பட்டி வன்முறையிலும், வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்களிலும், 2011 ஆம் ஆண்டு பரமக்குடி துப்பாக்கிச் சூடு வன்முறை, 2015 ஆம் ஆண்டு ஆந்திராவில் 20 தமிழர் படுகொலை வழக்கு, 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி காவல்துறை தாக்குதல்களை எதிர்த்தும், ஆயிரக்கணக்கான அரசு அரசுப் பள்ளிகளில் மனித உரிமைக் கல்வியினைக் கொண்டு செல்வதிலும், பொது மக்களுக்கு மனித உரிமைப் பயிற்சி கொடுப்பதிலும், மக்கள் கண்காணிப்பகம் ஆற்றி இருக்கின்ற பணிகளை அனைவரும் அறிவோம். இந்தப் பணிகளை முடக்க வேண்டும்; முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்தான், ஒன்றிய அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு வருகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.
மராட்டியம், ஆந்திரம், மேற்கு வங்கம் உட்படப் பல மாநிலங்கள், சிபிஐ அமைப்பு,மாநில அரசின் ஒப்புதல் இன்றி, தானாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதற்குத் தடை விதித்து உள்ளனர். அதுபோல, சிபிஐ அமைப்பின் இதுபோன்ற தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளுக்கு, தமிழ்நாடு அரசும் மூக்கணாங்கயிறு போட வேண்டும்; மாநிலத் தன்னாட்சி உரிமைக்கு வலுச் சேர்க்க வேண்டும்; ஒன்றிய பாஜக அரசின் அடக்குமுறைகளில் இருந்து சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
உலகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion