மழை பாதிப்பு: வண்டலூர் பூங்கா நாளை இயங்காது என அறிவிப்பு
மிக்ஜாக் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட மக்களை மிரட்டிச் சென்றது.
மிக்ஜாம் மழை பாதிப்பு காரணமாக பூங்கா நாளை இயங்காது என்று வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2 ஆயிரம் விலங்குகள், கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி, யானை, கரடி, ஒட்டகச்சிவிங்கி, நீர்நாய், வெள்ளைப் புலி, காண்டாமிருகம், காட்டெருமை மற்றும் பறவைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
அதேபோல வண்டலூர் பூங்காவில் வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. மேலும் வண்ணத்துப் பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
25 லட்சம் பார்வையாளர்கள் வருகை
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவதால் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் இது உள்ளது. இந்தியாவில் இருக்கும் உயிரியல் பூங்காக்களில், சிறந்த பூங்கா என்ற விருதையும் வண்டலூர் உயிரியல் பூங்கா பெற்றுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருவார்கள். சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருப்பதால் வார விடுமுறை நாட்களில், சென்னை சுற்று வட்டாரங்களில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் வண்டலூர் பூங்காவிற்கு வருகை தருவார்கள்.
விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை போன்ற தினங்களில் வழக்கத்தை விட மூன்றிலிருந்து, நான்கு மடங்கு அதிக அளவு மக்கள் உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிவது வழக்கம்.
பூங்கா நாளை இயங்காது
இந்த நிலையில் மிக்ஜாக் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட மக்களை மிரட்டிச் சென்றது.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஞாயிறு இரவு தொடங்கி நேற்று இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மாநகரின் செயல்பாடு என்பதே பெரும்பாலும் ஸ்தம்பித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பூங்காவிலும் புயல் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது.
இந்த மழை பாதிப்பு காரணமாக பூங்கா நாளை இயங்காது என்று வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பூங்கா நாளை மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.