‛ஆரம்பிக்கலாமா...’ சத்தமின்றி பிக்பாஸ் வழியாக வருகிறது ஆன்லைன் ரம்மி! உங்களுக்கு ஓகேவா கமல்?
பிக்பாஸின் ஸ்பெஷல் ஸ்பான்சராக A23 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது வேறு ஒன்றும் இல்லை. ஆன்லைன் ரம்மியே தான்.
விரைவில் என்ற அறிவிப்போடு வில்லச்சிரிப்புடன் பிக் பாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். பிக்பாஸ் ப்ரோமா ட்ரெண்டான நிலையில் முக்கியமான ஒன்றும் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அது ஸ்பான்சர். பிக்பாஸின் ஸ்பெஷல் ஸ்பான்சராக A23 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது வேறு ஒன்றும் இல்லை. ஆன்லைன் ரம்மியே தான். இது வெறும் ஸ்பான்சராக கடந்துபோக முடியாது. இதற்கு பின்னால் நிறைய உயிர்கள் பலிகொடுக்கப்பட்டதும், பெரிய சட்டப்போராட்டம் நடைபெற்றும் வருகிறது.
நடந்தது என்ன?
காட்டுக்குள் சீட்டுக்கட்டு விளையாடுவதை கேள்விப்பட்டாலே சீறிப்பாயும் போலீசும், சட்டமும் ஆன்லைனில் நடக்கும் ரம்மி விளையாட்டை கண்டும் காணாமல் இருந்தன. அது ஒரு ஆன்லைன் விளையாட்டாகவே பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குப்பின் பல உயிர்கள் பலி வாங்கப்பட்டன. ஏராளமான இளைஞர்கள் தங்கள் வாழ்வை ஆன்லைன் ரம்மிக்குள் இழந்தனர். முதலில் லாபத்தை அள்ளிக்கொடுக்கும் ரம்மி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சுருட்டத் தொடங்கியது.
போட்டதை எடுத்துவிடலாம் என அடுத்தடுத்து போக ஒரு நிலையில் கடனுக்குள் சிக்கும் நபர் தற்கொலையை நோக்கி தள்ளப்படுகிறார். இப்படியாக பல உயிரிழப்புகளுக்கு ரம்மி தன்பெயரைக் போட்டுக்கொண்டது. அதன் பின்னர்தான் இது வெறும் ஆன்லைன் விளையாட்டு அல்ல, இதும் ஒரு லாட்டரியே, இதும் ஒரு சூதுதான் என பலரும் விழித்துக்கொண்டனர். அரசியல் கட்சித்தலைவர்கள் உட்பட பலரும் ரம்மிக்கு எதிராக குரல் கொடுத்தனர். உயிர்ப்பலி வாங்கும் ஆன்லைன் சூதுவை தடை செய்ய வேண்டுமென குரல்கள் எழுந்தன. அதேநேரத்தில் பணத்தில் கொழுத்த ஆன்லைன் சூது நிறுவனங்கள் தொடர் விளம்பரங்கள், ஸ்பான்சர் என முன்னேறி சென்றுகொண்டே இருந்தது. ஆன்லைன் விளையாட்டு பிரச்னைகளை குறிப்பிட்ட நீதிமன்றம் இவ்வளவு பிரச்னையை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டை ஏன் அரசு தடை செய்யக்கூடாது என கேள்வி எழுப்பியது.
அழுத்தங்கள் அதிகரிக்கவே ரம்மி விவகாரத்தில் பார்வையை செலுத்தியது அப்போதைய அதிமுக அரசு, 2020 நவம்பரில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அவசர தடைச் சட்டத்தை விதித்தது. இதுபோதும் என நிம்மதி மூச்சுவிட்டனர் சூதாட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள். ஆனால் தடையை எதிர்த்து நீதிமன்ற படியேறின சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள். நாட்கள் உருண்டோட தமிழ்நாட்டின் ஆளும் அரசும் மாறியது. நீதிமன்றத்தில் வாதாடிய அரசு, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் பல இளைஞர்களின் உயிரை பலி வாங்கியது. அதனால் தான் தடை என தெரிவித்தது. பதில் வாதம் செய்த சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களோ, இளைஞர்களின் உயிரை பலி வாங்குகிறது என்றால் ஜல்லிக்கட்டும் தானே உயிரை பலி வாங்குகிறது என தெரிவித்தது. இந்த விவகாரத்தை உற்றுநோக்கிய நீதிமன்றம் தடைச்சட்டம் என்றால் பொத்தாம்பொதுவாக இருக்கக் கூடாது. முறையான விதிமுறைகளுடன் சட்டம் இயற்றப்பட வேண்டும். அதனால் முறையான சட்டத்தை அரசு இயற்றட்டும் அதுவரை தடைச்சட்டம் நீக்கப்படுகிறது என தெரிவித்தது. தடை நீங்கியதும் தீயாய் வேலை செய்யத் தொடங்கிய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கபோல் விளம்பரங்களை அள்ளித்தூவத் தொடங்கியுள்ளன. அதில் ஒன்றாக அமைந்துள்ளது பிக்பாஸ் ஸ்பான்சர்.
என்ன சொல்கிறது அரசு?
ஆன்லைனுக்கு தற்காலிக தடைச்சட்டம் கொண்டு வந்தது அதிமுக என்றாலும் இப்போது வாதாடி வருவது திமுக. சரியாக வாதாடாத காரணத்தினால் தான் ஆன்லைன் தடைச்சட்டம் நீங்கிவிட்டது என எதிர்க்கட்சியான அதிமுக, திமுகவை சாடியுள்ளது. ஆனால் திமுகவோ, சரியாக சட்டத்தை இயற்றாமல் அவசரத்தில் செய்த காரியமே இப்படி ஆகிவிட்டது என அதிமுகவை சாடுகிறது.
அடுத்து என்ன?
ஆன்லைன் ரம்மி தடை குறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிச்சயம் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் தான் மிகத்தீவிரமாக விளம்பரங்களை வெளியிட்டு முன்னேறுகிறது சூதாட்ட நிறுவனங்கள்.
குதிரைப்பந்தயம், லாட்டரி சீட்டு எல்லாம் எதிர்ப்புகளை சந்தித்து முறையான சட்டம் இயற்றப்பட்டே தடை செய்யப்பட்டன. அந்த வரிசையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் முறையான சட்டமியற்றி ஒரேயடி, மரண அடி என நீக்கிவிட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளுக்கு...