TamilNadu Rains: வெயிலுக்கு ரெஸ்ட்.. இரண்டு நாளுக்கு மழைதான்.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்
Weather Update: தென் தமிழகம் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/DYsBHNoMmc
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) April 12, 2022
இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து 5 வது நாளாக பிற்பகலுக்கு மேல் மழை பெய்து வருகிறது.
நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, டவுன், பாளையங்கோட்டை, என்.ஜி.ஒ காலனி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. போலவே, மதுரை, புறநகர் பகுதிகளான வாடிப்பட்டி, நாகமலைப் புதுக்கோட்டை, அச்சம்பத்து, விராட்டிபத்து உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.பொள்ளாட்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
தஞ்சாவூர்,பெரம்பலூர், அரியலூர், கோவை, திருப்பூர், திருச்சி, நாகை, உள்ளிட்ட பகுதிகளிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பதிவாகியுள்ளது.
24 மணி நேரத்தில் பதிவான மழையளவு [மி. மீ] pic.twitter.com/y3SUtvacLH
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) April 12, 2022
மேலும், தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் இன்று கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில், 122 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான வெப்பம் பதிவானதாக இந்திய வானிலைத் துறை தெரிவித்திருந்தது. மார்ச் மாதமே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. அப்படியிருக்க, ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வெப்பம் எப்படியிருக்கும் என்று பயத்தில் இருந்து மக்களுக்கு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்து வருவதால் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி பரவுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கின்றனர் சாமானிய மக்கள்.
இந்நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்