18 - 45 வயதினருக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
புதுச்சேரி மாநிலத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் திட்டத்தை தொடங்கிவைத்தார் ஆளுநர்.
புதுச்சேரி மாநிலத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் திட்டத்தை தொடங்கி வைத்தார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். நடிகர் விவேக் மரம் நடுவதை மட்டும் பிரபலப்படுத்தவில்லை, தடுப்பூசி போட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் என்று அவர் கூறினார்
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், 45வயதுக்கு மேற்பட்டோர் என படிப்படியாக தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. இந்நிலையில் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் புதுவையில் தடுப்பூசி செலுத்த இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்வோர் தடுப்பூசி போட எங்குவர வேண்டும் எப்போது வரவேண்டும் என தகவல் அனுப்பப்படும். அதே நேரத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதனையும் பயன்படுத்தி பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் வந்து தடுப்பூசி போட தயக்கம் இருந்தால் வீட்டுக்கு அருகில் பள்ளிகளில் நடக்கும் தடுப்பூசி முகாமுக்கு சென்று தடுப்பூசி போடலாம்.
தடுப்பூசிபோடுவதுதான் கொரோனா வராமல் தடுப்பதற்கான நிரந்தர தீர்வாக இருக்கும். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்திராகாந்தி மருத்துவமனை, மகாத்மா காந்தி பல்மருத்துவமனை, இ.எஸ்.ஐ.மருத்துவனை, மாகே, ஏனாம் அரசு மருத்துவமனை, காரைக்கால் காமராஜர் மருத்துவனை ஆகிய 6 மையங்களில் தடுப்பூசி போடப்படும். முன்பதிவு செய்யாதவர்கள் ஆதார் கார்டுடன் முகாம் நடைபெறும் இடங்களுக்கு நேரில் வந்து அங்கு பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 6 லட்சம் ஊசி கேட்டுள்ளோம்.
முதல் கட்டமாக 30 ஆயிரம் தடுப்பூசி வந்துள்ளது. பயன்பாட்டுக்கு ஏற்ப தடுப்பூசிகள் தரப்படுகிறது. இல்லாவிட்டால் தடுப்பூசி வீணாகிவிடும். அரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் தங்கள் பகுதியில் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டும், பிரபலப்படுத்த வேண்டும். நடிகர் விவேக் இறந்த நாளில் 18 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டனர். ஆனால்அவர் இறந்த பின்பு இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. நடிகர் விவேக் மரம் நடுவதை மட்டும் பிரபலப்படுத்தவில்லை. தடுப்பூசிபோட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சுகாதாரத்துறையினர் அதிகளவில் பரிசோதனை நடத்துகின்றனர். இதனால் கொரோனா தொற்று உள்ளவர்களை கூடுதலாக கண்டறிகின்றனர். வீட்டு தனிமையில் 15 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களையும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்கின்றனர். உலகளவில் 94 சதவீத ஆக்சிஜன் அளவு உள்ளவர்கள் வீடுகளில் சிகிச்சை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய், குழந்தைகளை கொரோனா நோய் தாக்குவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என கூறினார்.
புதுச்சேரி மாநிலத்தில் இளைஞர்கள் தைரியமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வது புதுச்சேரியை வலுப்படுத்தும் எனவும். மேலும் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரோஜாப்பூ வழங்கி ஊக்கப்படுத்தினார் தமிழிசை சவுந்தரராஜன், இன்று ஒரே நாளில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாகவும் அவர்களுக்கு அவர்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது