Kallakurichi School : 144 நாட்களுக்கு பிறகு கனியாமூர் பள்ளி திறப்பு..! ஆர்வமுடன் வந்த மாணவர்கள்...! பலத்த போலீஸ் பாதுகாப்பு..
பள்ளியை நிர்வகிக்கும் லதா அறக்கட்டளை சார்பில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு , அரசும் ஆய்வு செய்வு செய்த நிலையில், திறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி 144 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சூறையாடப்பட்ட பள்ளி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூரைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் பள்ளி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக சின்னசேலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாணவி உயிரிழந்தது தொடர்பாக நீதி கிடைக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த நிலையில், அது கலவரமாக உருவெடுத்து பொருட்கள் சூறையாடப்பட்டது. இதில் காவல்துறை வாகனத்தின் மீது கற்களை வீசப்பட்ட நிலையில் காவல்துறையினர் பதிலுக்கு தடியடி நடத்தினர். இதனையடுத்து பள்ளி மூடப்பட்டது.
மீண்டும் திறக்கப்பட்ட பள்ளி
இதனிடையே பள்ளியை நிர்வகிக்கும் லதா அறக்கட்டளை சார்பில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு தரப்பும் ஆய்வு செய்வு செய்த நிலையில், பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், 9 முதல் 12 ஆம் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்தும் பொருட்டு, டிசம்பர் 5 ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் ஒரு மாத காலம் நேரடி வகுப்புகளை நடத்த உத்தரவிட்டது.
குறிப்பாக பள்ளியில் ஏ மற்றும் பி பிளாக்குகளை பயன்படுத்தலாம் என்றும், அதேசமயம் ஏ பிளாக்கின் விடுதி இயங்கி வந்த 3வது மாடி தளத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கலவரத்தில் சேதமடைந்த சி மற்றும் டி பிளாக்குகளும் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று பள்ளி திறக்கப்பட்டது.
9 முதல் 12 வகுப்புகளுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடக்கும் நிலையில், பிற வகுப்பினருக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. மேலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க அப்பள்ளி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக பூசணிக்காய் சுற்றி பள்ளிக்கான திருஷ்டி கழிக்கப்பட்டு பள்ளி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.