Exclusive | மாணவி தற்கொலையில் மதமாற்ற சர்ச்சை உண்மையா?- தஞ்சை எஸ்பி பிரத்யேகப் பேட்டி
சம்பந்தப்பட்ட பள்ளியில் மதமாற்றம் நடைபெற்றதா என்பது குறித்து, அங்கு படித்துவரும் பிற மாணவர்களிடமும், பெற்றோரிடமும் விசாரித்து வருகிறோம்.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த மாணவி, தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளி என்னும் பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்புப் பயின்று வந்தார். பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்தவர். பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு விடுதி வார்டனின் தொல்லையே காரணம் என்று முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர், மாணவியை மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாகக் கூறும் வீடியோ வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், முதற்கட்ட விசாரணையில் மதம்மாறச் சொல்லி வற்புறுத்தியதாக எந்தத் தகவலும் உறுதியாகவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா நேற்று தெரிவித்தார். இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அரியலூர் மாணவியின் தற்கொலை வழக்கு விசாரணை குறித்து 'ஏபிபி நாடு' செய்தி நிறுவனத்திடம் பேசினார் எஸ்.பி. ரவளி ப்ரியா.
2 ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறச்சொல்லி பள்ளியில் கேட்டதாக அரியலூர் மாணவி பேசும் வீடியோ வைரலாகி உள்ளதே, அதைப் பார்த்தீர்களா, அதன் உண்மைத் தன்மை பரிசோதிக்கப்பட்டதா?
பார்த்தேன். அந்த வீடியோவை மாணவியின் பெற்றோர்கள் நேற்றுதான் அளித்தனர். நேற்று முன்தினம் (ஜன.19) பகலில் மாணவி உயிரிழந்தார். நேற்று (ஜன.20) மதியம் 3.40 மணிக்குத்தான் வீடியோ எங்களுக்குக் கிடைத்தது.
அதில் சொல்லப்பட்டிருந்த மதமாற்றம் குறித்த தகவல்கள், முதல் தகவல் அறிக்கையிலோ, இறுதி வாக்குமூலத்திலோ, காவல்துறைக்கு அளித்த தகவலிலோ இல்லை. நேற்று அளித்த வீடியோவில்தான் புதிதாக இந்தத் தகவல் கிடைத்தது. இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடித்தால்தான் அதை மரண வாக்குமூலமாக எடுக்கலாமா, இல்லையா என்பதை உறுதி செய்ய முடியும்.
சம்பந்தப்பட்ட மாணவியிடம் நீதித்துறை நடுவர் ஜன.16-ம் தேதியே மரண வாக்குமூலத்தைப் பெற்றுள்ளார். அதனால் புதிய வீடியோவை யார், எப்போது, எங்கே பதிவு செய்தது, வீடியோ எடுக்கும்போது சம்பந்தப்பட்ட மாணவி என்ன மாதிரியான சூழ்நிலையில் இருந்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
அதேபோல சம்பந்தப்பட்ட பள்ளியில் மதமாற்றம் நடைபெற்றதா என்பது குறித்து, அங்கு படித்துவரும் பிற மாணவர்களிடமும், பெற்றோரிடமும் விசாரித்து வருகிறோம். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மீண்டும் அவர்களின் வாக்குமூலங்களைப் பெற உள்ளோம்.
பிற மாணவர்களிடம் நடந்த விசாரணையில், மதமாற்றம் நடைபெற்றதா என்பது குறிப்பிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளதா?
இல்லை, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாணவியை நீங்கள் நேரடியாக மருத்துவமனையில் சந்தித்துப் பேசினீர்களா?
மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே ஐசியுவில்தான் இருந்தார். அவர் ஜனவரி 9-ம் தேதி விஷத்தைக் குடித்துள்ளார். ஆனால் 16-ம் தேதிதான் பெற்றோர் புகார் அளித்தனர்.
கொரோனா காரணமாக ஐசியூவுக்குச் சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டிருப்பவர்களைப் பார்க்க முடியாது. எனினும் இந்திய சான்று சட்டம், பிரிவு 32-ன் படி, மருத்துவரின் அனுமதி மற்றும் ஒப்புதலைப் பெற்று, மாணவியிடம் வீடியோ எடுத்தோம். காவல்துறை, நீதித்துறை நடுவர் என இரண்டு தரப்பிலும், மாணவியின் வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது குழந்தைகள் நலக் குழுவினரும் உடன் இருந்து, பதிவு செய்தனர்.
அந்த 3 ஆதாரங்களிலுமே மாணவி, குறிப்பிட்ட வார்டனுக்கு எதிராக மட்டுமே குற்றம்சாட்டி இருந்தார். அந்த வார்டன் சகாய மேரி 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதில் மதமாற்றம் குறித்து எதுவும் பேசப்படவில்லை.
மாணவ மாணவிகளை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாகவும், அதை ஏற்க மறுப்பவர்களுக்கு உளவியல் ரீதியாக சித்திரவதை அளித்துத் தற்கொலைக்குத் தூண்டியதாகவும் கூறப்படும் தஞ்சாவூர் பள்ளி மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் தமிழக டிஜிபிக்குக் கடிதம் எழுதியுள்ளதே...
அதுகுறித்துத்தான் நாங்கள் விசாரித்து வருகிறோம். பள்ளியில் ஒரு மாணவி மட்டுமே இல்லை. 470 மாணவர்கள் அங்கு படிக்கின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களிடமும் அவர்கள் விசாரணை நடத்தி இருக்கலாம்.
பள்ளி மாணவியை மத மாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதாக எந்தத் தகவலும் இல்லை என்று நீங்கள் நேற்று விளக்கம் அளித்த நிலையில், தமிழகக் காவல்துறை தன்னுடைய மாண்பை இழந்துவிட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளாரே...
நான் சமூக வலைதளங்களுக்கு பதிலளிக்க மாட்டேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாணவியின் பெற்றோருக்கு பதிலளிப்பேன். அவர்கள்தான் மனு அளித்திருக்கிறார்கள். அதை நாங்கள் விசாரித்து வருகிறோம். மாவட்ட எஸ்.பி.யாக இந்த வழக்கு விசாரணையை நான் மேற்பார்வையிட்டு வருகிறேன்.
இவ்வாறு தஞ்சாவூர் எஸ்.பி. ரவளி ப்ரியா தெரிவித்தார்.