Jayakumar: முகத்திலும், குரலிலும் சோர்வு! சிறையில் இருந்து வெளியே வந்ததும் ஜெயக்குமார் சொன்னது இதுதான்!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
அதிமுகவை அழிக்க பொய் வழக்கு போடுகின்றனர் என்று ஜெயிலில் இருந்து வெளியே வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து சிறையில் இருந்து இன்று வெளியே வந்தார் ஜெயக்குமார். அப்போது, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “அதிமுகவை அழிப்பதற்காக தமிழ்நாடு அரசு பொய் வழக்கு போடுகிறது. நகர்ப்புற தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க முயன்ற என் மீதும் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர்" என்று கூறினார்.
முன்னதாக, சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயக்குமாருக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஜெயக்குமார், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் இரண்டு வாரம் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திடுகிறார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரபா, அவரது கணவர் நவீன் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 5 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக தெரிவிக்கப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கனவே இரண்டு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி மார்ச் மாதம் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் தனது வழக்கறிஞர் மூலமாக செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலமாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்டதில், ஜெயக்குமார் மீதான ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புகார்தாரர் மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், ஜாமினில் வெளியே விட்டால் எங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும், சாட்சிகளை கலைத்து விட வாய்ப்பு என தனது வாதத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். அதனை அடுத்து, காவல் காலம் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்