February Temperature: வேதனையில் சாதனை செய்த பிப்ரவரி: செம ஹாட்...! - அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட்
இதுவரை பதிவான வெப்பநிலைகளிலேயே 2023 பிப்ரவரி தான் மிகவும் அதிகமான வெப்பநிலையை கொண்டிருந்தது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுவரை பதிவான வெப்பநிலைகளிலேயே 2023 பிப்ரவரி தான் மிகவும் அதிகமான வெப்பநிலையை கொண்டிருந்தது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குளிர்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கி விட்டது. கடந்த சில நாட்களாக பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த குளிர், தற்போது மெல்ல விலகி வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. இதனிடையே வரும் மாதங்களில் இந்தியா வெப்பமான காலநிலையை அனுபவிக்கலாம் என இந்திய வானிலை ஆய்வுத் மையத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி எஸ்.சி.பான் கூறியுள்ளார்.
முதல் இடத்தில் 2023ஆம் ஆண்டும், இரண்டாம் இடத்தில் 2016ஆம் ஆண்டும், மூன்றாம் இடத்தில் 2006ஆம் ஆண்டும், 4ஆம் இடத்தில் 2017ஆம் ஆண்டும் 5ஆம் இடத்தில் 2009ஆம் ஆண்டும் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு 122 வருடங்களில் பிப்ரவரி மாதத்திற்கான அதிகப்பட்ச வெப்பநிலை இந்தாண்டு தான் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் பல பகுதிகள் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையை எதிர்கொள்வதால் வேளாண்மை மற்றும் நாட்டின் மின் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அதிகரித்து வரும் வெப்பநிலையை எதிர்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் நேற்றைய தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், மார்ச் 1 ஆம் தேதி முதல் வெயில் தாக்கத்தினால் ஏற்படும் நோய்களை கண்காணிக்குமாறு மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச செயலாளர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய மருந்துகள், ஐஸ் பேக், மருத்துவ கருவிகளை இருப்பில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கோடை வெயிலின் தாக்கம் தலைக்காட்ட தொடங்கியிருப்பதால் அனைத்து இடங்களிலும் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் பழரசம், குளிர்பானம் போன்ற உணவுப் பொருட்களை அதிகளவில் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
அதேசமயம் தாகம் எடுக்கவில்லை என்றாலும், போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறும், மெல்லிய, தளர்வான, பருத்தி ஆடைகளை அணிந்துகொள்வது நல்லது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூரியஒளி நம் மீது நேரடியாக படாமல் வெளியே செல்லும் போது குடை, தொப்பி, தொப்பி, துண்டு, பிற தலை கவசங்களைப் பயன்படுத்துமாறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.