தமிழுக்கு நோ... பெயர் அளவில் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டம்... காலநிலை செயல் திட்ட வரைவு அறிக்கையால் அதிருப்தி
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்காக மாநில அளவிலும் மாநகராட்சி அளவிலும் காலநிலை செயல்திட்டத்தை தயாரித்து செயல்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி, சென்னை காலநிலை செயல் திட்ட வரைவு அறிக்கையை (Chennai Climate Action Plan - CCAP) சென்னை மாநகராட்சி வெளியிட்டிருந்தது. நாளை மறுநாள் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் அதன் மீது பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்காக மாநில அளவிலும் மாநகராட்சி அளவிலும் காலநிலை செயல்திட்டத்தை தயாரித்து செயல்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் விளைவாக, சென்னை மாநகராட்சி காலநிலை செயல்திட்டத்தின் வரைவு அறிக்கையை கடந்த 12ஆம் தேதி வெளியிட்டது. ஆனால், இது தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. எந்தவித முன்னறிவிப்புமின்றி கடந்த செப்டம்பர் 12ஆம் நாள் ஆங்கிலத்தில் மட்டுமே அறிக்கை வெளியிடப்பட்டது.
மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கையை தமிழில் வெளியிடாமல், மிகக்குறைந்த கால அவகாசத்தில் கருத்துகள் கோருவது சரியான ஒரு நடவடிக்கையாக இருக்காது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பல்வேறு தரப்பு மக்களும் அறிக்கை குறித்து முழுமையாக அறிந்து கொண்டு கருத்து தெரிவிப்பதற்கு வசதியாக வரைவு அறிக்கை தமிழிலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வரைவு அறிக்கை குறித்த தகவல்கள் மக்களிடம் சென்றடைவதற்கு முன்பாகவே கருத்து தெரிவிப்பதற்கான கெடுவை நாளை மறுநாளுடன் நிறைவு செய்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வரைவு அறிக்கையில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதாகவும் அதில், குறிப்பிட்டுள்ள 6 தலைப்புகளில் உள்ள 66 இலக்குகள் குறித்த எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. காற்று மாசுபாட்டைத் தடுப்பது குறித்து திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து முன்வைக்கின்றனர்.
மரங்களையும் நகர்ப்புற பசுமைப் பகுதிகளையும் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். அதற்கான பல்லுயிர் (Biodiversity) பாதுகாப்பு இலக்கினை மாநகர காலநிலை செயல்திட்டங்கள் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சென்னை திட்டத்தில் அத்தகைய இலக்கு இடம்பெறவில்லை. எனவே, சென்னை காலநிலை மாற்ற செயல் திட்டத்தை உருவாக்கும் நடைமுறையில் தலைகீழ் மாற்றம் செய்ய வேண்டும்.
சுற்றுச்சூழலின் முக்கிய அங்கமான மரங்கள் பற்றி திட்டத்தில் எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை. நகர்ப்புறங்களில் பசுமையான பகுதிகளை பாதுகாப்பது குறித்து திட்டத்தில் தெளிவுப்படுத்தப்படவில்லை. வரைவு அறிக்கையில், ஐநா வாழ்விட அமைப்பின் வழிகாட்டி கொள்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் மற்றும் அதிகம் பாதிக்கப்படக் கூடிய மக்களுடன் சிறப்பு கலந்தாய்வுகளை நடத்தவும் குடிசைப்பகுதி மக்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்போர், மீனவர்கள் உள்ளிட்ட அதிகம் பாதிக்கப்படுவோருடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.