Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
தேர்தல் சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் இன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தம் தொடர்பாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று விளக்கம் அளித்தார். அப்போது, காங்கிரஸாரை கடுமையாக குற்றம்சாட்டிய அவர், எஸ்ஐஆர் குறித்து இந்த அவையில் விவாதிக்க முடியாது என்பதில் தெளிவாக உள்ளதாகவும், அது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என்றும் கூறினார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காங்கிரஸ் மீது குற்றம்சாட்டிய அமித் ஷா
நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் சீர்திருத்தம் குறித்து இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதாகவும், இது குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை என்ற தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், அது குறித்த விவாதத்திற்கு நாடாளுமன்றம் உயர்ந்த இடம் என்பதை தான் தெளிவாக சொல்வதாகவும் கூறிய அவர், பாஜக - தேஜ கூட்டணி, விவாதத்தில் இருந்து விலகி ஓடியதில்லை என்றும், எந்த விவகாரம் குறித்தும் நாடாளுமன்ற விதிமுறைகளின்படி விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.
அதோடு, எஸ்ஐஆர் குறித்து அவையில் விவாதிக்க முடியாது என்பதில் தெளிவாக இருப்பதாக கூறிய அமித் ஷா, எஸ்ஐஆர் என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என்றும் தேர்தல் ஆணையமும், தலைமைத் தேர்தல் ஆணையரும் அரசின் கீழ் செயல்படவில்லை என்றும் விளக்கமளித்தார். மேலும், எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடத்தி கேள்வி எழுப்பப்பட்டால், அதற்கு யார் பதில் அளிப்பார்கள் என்று கேட்ட அவர், கடந்த 4 மாதங்களாக எஸ்ஐஆர் குறித்து பொய்கள் பரப்பப்பட்டதாகவும், நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
''இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை''
தொடர்ந்து பேசிய அமித் ஷா, ஒரு வெளிப்படையான வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான நடைமுறை தான் எஸ்ஐஆர் என்று கூறினார். இரட்டை பதிவுகள், இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதே எஸ்ஐஆர்-ன் பணி என கூறிய அவர், வெளிநாட்டினரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், அதற்காகவே எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளப்படுவதாகவும்ம, இந்தியாவில் சட்டவிரோத குடியேறிகள் வாக்குப்பதிவில் ஈடுபட வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பினார். அதோடு, நாட்டில் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்படும் என்றும் திட்டவட்டமாக கூறினார்.
மேலும், வாக்காளர் பட்டியலை சரி செய்வதே எஸ்ஐஆரின் பணி என்று அவர் கூறிய அவர், நாட்டு மக்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் வருத்தப்படுவதாகவும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சட்டவிரோத குடியேறிகளின் பெயர்களை எஸ்ஐஆர் நீக்கும் என்றும் தெரிவித்தார்.
ஒரு நாட்டின் பிரதமரையும், மாநில முதல்வரையும் ஊடுருவல்காரர்கள் தீர்மானித்தால் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்க முடியுமா என கேள்வி எழுப்பிய அமித் ஷா, வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவது தான் எஸ்ஐஆர் என்றும், இது சில கட்சிகளின் அரசியல் நோக்கங்களை பாதிக்கும் என்றும் விமர்சித்தார். மேலும், அந்த கட்சிகளுக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த நாட்டின் வாக்காளர்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும், ஊடுருவல்காரர்கள் தான் வாக்களிப்பார், ஆனால் தற்போது அவர்களும் செல்ல உள்ளனர் என்றும் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.





















