(Source: ECI/ABP News/ABP Majha)
Mettur Dam | இத்தனை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. மேட்டூர் அணையின் இன்றைய நீர் நிலவரம்...
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 12 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 14,812 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 12,396 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 25,000 கன அடியாக அதிகரிப்பு.
அணையின் நீர் மட்டம் 120 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியில் இருந்து 24,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுவரும் நீரின் அளவும் வினாடிக்கு 350 கன அடியில் இருந்து 150 கன அடியாக குறைப்பு. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை , கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை சாகுபடிக்கான பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் சம்பா சாகுபடிக்காகவும் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீரானது திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளை பொறுத்தவரை கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,518 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 6,308 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 64.82 கன அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.39 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,312 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 1,788 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது .