CM MK Stalin Speech : வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என பாகுபாடின்றி சேவையாற்றுகிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வாக்களித்தவர்கள, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பாரபட்சமின்றி சேவையாற்றி வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
கோவை, திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
" கோவை விமான நிலையத்தில் இருந்து இங்கு வர இரண்டரை மணி நேரமாகி விட்டது. மிகுந்த ஆர்வத்துடன் ஏராளமானோர் வரவேற்றதால் குறித்த நேரத்திற்கு மேடைக்கு வர தாமதம் ஏற்பட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து புதிய திட்டங்களை துவக்கிவைக்க வந்திருக்கின்றேன். 22ம் தேதி இந்த நிகழ்விற்கு வர வேண்டும் என செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டார். இது நிகழ்சியாக இல்லாமல் மாநாடாக செந்தில் பாலாஜி நடத்தி இருக்கின்றார். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மதிப்பீட்டில் திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான வெற்றி நிலையில், கோவையில் வெற்றி வாய்ப்பை பெறவில்லை.
வெற்றி வாய்ப்பை தவற விட்ட மாவட்டமாக இருந்தாலும், மாபெரும் மக்கள் சபை இங்குதான் நடத்தப்படுகின்றது. செந்தில்பாலாஜியை பொறுப்பாக நியமித்து இருக்கின்றேன். அனைத்து மாவட்ட மக்களும் என்னுடைய மக்கள்தான் என இந்த அரசு செயல்படுகின்றது. தி.மு.க அரசை பொறுத்த வரை மனு கொடுத்தால் அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேர்தலுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் மனுக்கள் பெறப்பட்டது. ஆட்சி அமைந்த அன்றே இதற்கு தனித்துறை அமைக்கப்பட்டது.
இப்போதும் பலர் மனுக்களை கொடுத்து வருகின்றனர். பெறப்படும் அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்படும். புதிய திட்டங்களை விட, தனி மனிதனின் கோரிக்கைகள் நிறைவேற்றபடுவது தான் முக்கியம். ஏராளமான திட்டங்களை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1132 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் துவங்கும். மாநகராட்சி பகுதியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சீராக குடிநீர் வழங்கப்படும்.
கடந்த ஆட்சியில் திட்டசாலைகள் போடப்படவில்லை. 5 திட்டசாலைகளை அமைக்க 200 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் இருக்கும் சிறைச்சாலை நகரின் வெளிப்பகுதிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு இரண்டு கட்டமாக செம்மொழி பூங்கா 200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தபடும். இந்த பணிகளுக்கு அரசாணைகள் விரைவில் வெளியிடப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும். கோவை நகர்புற வளர்ச்சி குழுமம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வெடுக்காமல் உழைக்கக்கூடியவர் செந்தில்பாலாஜி. தொழில்களுக்கு அடித்தளமாக இருக்கும் மாவட்டம் கோவை. இது போன்ற தொழில் வளர்ச்சி அனைத்து பாவட்டங்களிலும் ஏற்படுத்ம வேண்டும். இந்தியாவில் முதல் தொழில் மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும். நாளை தொழில் முதலீடு மாநாட்டில் புதிய ஓப்பந்தங்கள் ஏற்படுத்தபடுகின்றது. இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். அதில் முதலிடம் கோவையாக இருக்கும். நான் எப்போதும் அதிகம் பேசமாட்டேன். செயலில் எனது பணி இருக்கும். அனைத்திலும் தலை சிறந்தமாவட்டமாக கோவை மாவட்டத்தை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்"
இவ்வாறு அவர் பேசினார்.