என்ன செய்யப்போகிறது புதிய அரசு?: உக்கிரமான கேள்விகளை அடுக்கும் அறப்போர்!
அறப்போர் இயக்கம் தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து ஊழல் புகார், கொரோனா நிலவரம் தொடர்பாக தொடர் கேள்விகளை எழுப்பி வருகிறது.
திமுக ஆட்சி என்றாலே அமைச்சர்களின் துறைமாற்றமோ நடவடிக்கையோ 99 சதவீதம் இருக்காது என்பதே இதுவரையிலான நடப்பு. அரிதாக அப்படி நடந்திருக்கிறது. இதனால்தான் ஒப்பீட்டளவில் திமுக அமைச்சர்கள் சுய முடிவெடுத்து அவரவர் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு மிளிரவும் செய்கிறார்கள்.
பதினாறாவது சட்டப்பேரவை காலமான இப்போது, மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் 15 பேர் முதல் முறை அமைச்சர்கள். மா.சுப்பிரமணியன் போன்றவர்களே பெரிய அளவில் ஆட்சி நிர்வாக அனுபவம் பெற்றவர்கள். மிக முக்கியமானதும் 11 இயக்குநரகங்களையும் கொண்ட பள்ளிக்கல்வித் துறையின் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி உள்பட பெரும்பாலானவர்களுக்கு, ஆட்சி நிர்வாகப் பயிற்சியே இப்போதுதான் ஆரம்பம். இந்நிலையில் சென்னை ஆணையர் தொடங்கி தலைமை செயலாளர் வரை அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா மாதிரியான இக்கட்டான காலத்தில் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பல துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேவேளையில் அரசுக்கு எதிரான கேள்விகளும் எழத்தொடங்கியுள்ளன. குறிப்பாக அறப்போர் இயக்கம் தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து ஊழல் புகார், கொரோனா நிலவரம் தொடர்பாக தொடர் கேள்விகளை எழுப்பி வருகிறது.
தடுப்பூசி தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள அறப்போர், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்த விரிவான வெளிப்படையான திட்டத்தை மத்திய மாநில அரசுகள் வெளியிட வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது. எத்தனை தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது மற்றும் எத்தனை தடுப்பூசிகளுக்கு தமிழக அரசு ஆர்டர் கொடுத்துள்ளது போன்ற விவரங்களை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம் என கோரிக்கை விடுத்துள்ளனர்
ஆக்சிஜன் படுக்கை தொடர்பாகவும் அறப்போர் கேள்வி எழுப்பியுள்ளது. தினமும் Corona பரவும் நபர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் அவர்களில் ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்கள் இனி என்ன செய்வார்கள்? அவர்கள் சிகிச்சை பெறுவதற்கு அரசாங்கம் என்ன செய்ய போகிறது? என பதிவிட்டுள்ளது
கொரோனா நிலவரம் மட்டுமின்றி ஊழல் தொடர்பாகவும் அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. அமைச்சர்கள் தவறு செய்தால் பதவி நீக்கம் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்
ஆனால் சுதா தேவி IAS போன்ற ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகளை உயர் பொறுப்பில் வைத்துக்கொண்டு எவ்வாறு தவறுகளை தடுக்க முடியும்? என பதிவிட்டுள்ளது.
பாரத்நெர் திட்டம் டெண்டரில் விதிகளை மீறி குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமாக பல மாற்றங்கள் செய்யப்பட காரணமாக இருந்தவர் தகவல் தொழில்நுட்ப செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது இவர் தொடர்ந்து செட்டிங் செய்ய அனுமதிக்கப்படுவாரா என்றும் தமிழக அரசிடம் அறப்போர் கேள்வி எழுப்பியுள்ளது.