ADMK BJP : பாஜக வந்தாலும், முன்வைத்த காலை பின்வைப்பதில்லை - அதிமுக கூட்டணி குறித்து விளக்கிய ஜெயக்குமார்
அதிமுகவின் பேனரில் பாஜகவின் பெயர் இடம்பெறாதது ஏன் என்பது குறித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம், ஈரோடு இடைதேர்தலுக்கான பணிமனையில் பாஜக தலைவர்கள் படம் புறக்கணிக்கப்பட்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
தட்டச்சு பிழை:
அப்போது, “தட்டச்சின் போது ஏற்பட்ட பிழையின் காரணமாக தான், தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயர் இடம்பெற்றது. தவறு திருத்தப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி என பெயர் மாற்றப்பட்டு உள்ளது. அதிமுக உள் விவகாரங்களில் பாஜக என்றும் தலையிட்டதில்லை. அண்ணாமலை தலையீட்டின் பெயரால் எல்லாம் பேனரில் பெயர் மாற்றப்படவில்லை. கூட்டணி கட்சிகளுக்கான மரியாதை வழங்கப்படும். புகைப்படம் இல்லை என்பதால் மட்டும் அவர்களுக்கு மரியாதை இல்லை என கருத முடியாது. கூட்டணி தர்மத்தின்படி தான் அதிமுக செயல்படும்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதால், கூட்டணி இறுதியான பிறகு அனைவரது புகைப்படங்களும் இடம்பெறும். தேர்தலுக்கு ஆதரவு தரும்படி நாங்கள் கோரியுள்ளோம். பாஜக ஒரு தேசிய கட்சி, முடிவெடுக்க இன்னும் நேரம் உள்ளது. உரிய நேரத்தில் அவர்கள் முடிவெடுத்து தெரிவிப்பார்கள், இன்றே நிலைப்பாட்டை அறிவியுங்கள் என தொல்லை செய்ய முடியாது” என, ஜெயக்குமார் கூறினார்.
போட்டியிடுவது உறுதி:
தொடர்ந்து, பாஜக வேட்பாளரை அறிவித்தால், வேட்பாளரை திரும்பப் பெறுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார், ஈபிஎஸ் அணியும் அதை பின்பற்றுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நாங்கள் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை என ஜெயக்குமார் பதிலளித்தார். இதன் மூலம் ஈரோடு இடைதேர்தலில் பாஜக வேட்பாளரை அறிவித்தாலும், ஈபிஎஸ் அணி தேர்தலில் எதிர்த்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.