Rain | சேலம் : இடி, மின்னல், பலத்த காற்று என அடித்து வெளுக்கும் கனமழை..
சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை
வளிமண்டல மேல் சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரித்திருந்த நிலையில், மதிய நேரத்தில் வெப்பம் சற்று குறைந்து சேலம் மாவட்டம் முழுவதும் கருமேகக் கூட்டங்கள் திரண்டன. பின்னர் அரை மணி நேரமாக இடியுடன் பலத்த காற்று வீசி வந்த நிலையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த சேலம் கிச்சிப்பாளையம் மெயின் ரோடு, குகை, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, ஐந்து ரோடு, 4 ரோடு, நாராயண நகர், பச்சைப்பட்டி, சாரதா கல்லூரி சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதேபோல் சேலம் மாவட்டத்தில் வீரகனூர், ஏற்காடு, சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று 467.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வீரகனூரில் 70.00 மி.மீ மழை பதிவானது. கங்கவல்லியில் 60 மி.மீ மழையும், சேலத்தில் 44.4 மி.மீ, காடையாம்பட்டி 42.2 மி.மீ, ஏற்காடு -36 மி.மீ, ஆத்தூர் 27 மி.மீ, மேட்டூர் 28.2, மி.மீ சங்ககிரி 19.1 மி.மீ, ஓமலூர் 18மி.மீ, எடப்பாடி 9.6 மி.மீ என மழை பதிவாகியுள்ளது.
நேற்று விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் மேட்டூர் மலைப்பகுதியில் பல இடங்களில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் காலை வேலைக்கு புறப்பட்டு சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிய தோடு பல கிலோமீட்டர்கள் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் நேற்று விடுமுறை நாள் என்பதால் பல ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்திருந்தனர்.
மாலை ஏற்காட்டில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மலைப்பாதையில் உள்ள மரங்கள் சாய்ந்தன, ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டிருந்ததால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல மணிநேரத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் சொந்த ஊர் திரும்பினர். சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.