அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மகள் மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், 65 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சேலத்தை சேர்ந்த கோரைப்பாய் வியாபாரி புகார்.
சேலம் மாநகர் அஸ்தம்பட்டி ஜான்சன்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த ஆண்டு சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், நான் கோரைப்பாய் வியாபாரம் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வந்ததோடு அரசுத்துறைகளுக்கும் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கும் கோரைப்பாய்களை இலவசமாக வழங்கி வந்தேன்.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையில் ஆசிரியராக பணியாற்றி வரும் வெங்கடேசன் என்பவர் அறிமுகமானார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆக இருந்த சுப்பிரமணியனிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். சேலம் மாவட்டம் பெரியகிருஷ்ணாபுரம் உண்டுஉறைவிட பள்ளி விடுதிக்கு 500 பாய்களும், கருமந்துறை வெள்ளிமலை உண்டு உறைவிட பள்ளி விடுதிக்கு 400 பாய்களும் கொடுக்குமாறு அவர் கூறினார். அதன் பேரில் 900 கோரைப்பாய்களைக் கொடுத்து அதற்கான தொகையாக 90 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டேன்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் விடுதிகளுக்கு எனக்கு ஒப்பந்தம் வாங்கி கொடுப்பதாக அமைச்சர் கூறியதால் நான் அடிக்கடி அமைச்சரை சந்திக்கும் சூழல் வந்தது. அப்போது சேலம் ஆதிதிராவிடர் நலத்துறை சமையல் பணிக்காக 80 பேர் நியமிக்கப்பட உள்ளதாகவும் இதில் 20 பேருக்கு சேலம் மாவட்டத்தில் பணி ஆணை வழங்க உள்ளதாகவும் இதற்கு எந்த ஒரு நேர்முகத் தேர்வும் கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் 3 லட்சம் ரூபாய் யார் தருகிறார்களோ அவர்களுக்குத்தான் சமையல் பணி வழங்குவேன் அதனால் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறுங்கள் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். நான் எனக்குத் தெரிந்த நண்பர்கள் உறவினர்களிடம் இதை தெரிவித்தேன்.
அமைச்சரின் வார்த்தையை நம்பி நானும் எனது உறவினர்களும் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி முதற்கட்டமாக 15 லட்சம் ரூபாயை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொடுத்தோம். அதன் பிறகு அமைச்சர் மீதி தொகையை செலுத்தினால் தான் பணி ஆணை வழங்க முடியும். அதனால் பணத்தை உடனடியாக செலுத்துமாறு எங்களை தொந்தரவு செய்தார். நாங்கள் பல இடங்களில் கடன் பெற்று 2015 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி சேலத்தில் வைத்து இருபது லட்சம் ரூபாயை இரண்டு தவணையாக கொடுத்தோம். அதன் பின்னர் மூன்றாவது மற்றும் நான்காவது தவணையாக தலா 15 லட்சம் ரூபாய் கொடுத்தோம் இந்த வகையில் மொத்தம் 65 லட்சத்தை முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியிடம் கொடுத்துள்ளோம். 65 லட்சம் ரூபாயை வாங்கி தன் மகள் லாவண்யாவிடம் சுப்பிரமணியன் கொடுத்துவிட்டார். பணத்தை வாங்கிக்கொண்டு பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கி கொடுக்காமல் காலதாமதத்தை ஏற்படுத்தி எங்களை பல இடங்களுக்கு அலைய வைத்தார். இதனிடையே 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவருக்கு எம்எல்ஏ சீட் கிடைக்காத காரணத்தால் அமைச்சர் தலைமுறைவாகிவிட்டார். தொடர்ந்து நானும் எனது உறவினர்களும் பல மாதங்கள் தேடி பார்த்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனிடையே சென்னை வேளச்சேரியில் சுப்பிரமணியன் அவரது மகள், மனைவி ஆகிய 4 பேரிடம் பணத்தை கேட்டதற்கு சொந்த ஊருக்கு வாருங்கள் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அமைச்சரை பார்த்து வந்ததில் 23.50 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டார். மீதித்தொகை 41.50 இலட்சத்தை தராமல் எங்களை ஏமாற்றி அடியாட்களை வைத்து அடித்து மிரட்டி அச்சுறுத்தினார். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார் எனவே முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் அவரது மகள், மகன் மற்றும் அடியார்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அதிமுக அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்த சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் இந்த வழக்கை சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரிக்க உத்தரவிட்டார்.
இதனை அடுத்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கிருஷ்ணராஜன், சமையல் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி மோசடி செய்த புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் லாவண்யா ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.