சேலம் : ”உடல் நலனைப் பாருங்க.. நேரம் ஒதுக்குங்க” : மாணவர்களுடன் இணைந்து யோகா செய்த அமைச்சர் சுப்ரமணியன்..
காலை நேரங்களில் நமக்கான நேரமாக ஒதுக்கிக் கொண்டு உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்...
சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், சூரமங்கலம் பகுதியில் நடைபெற்ற யோகா தின விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டு கல்லூரி மாணவ-மாணவியருடன் இணைந்து யோகாப் பயிற்சியில் ஈடுபட்டார். இந்த யோகாப் பயிற்சியில் சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர். இதில் சுவாசப் பயிற்சி, சர்வாங்காசனம், உத்தன்படாசனம் உள்ளிட்ட பல்வேறு வகையான யோகாசனங்களை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் அனைவரும் அரைமணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் கடைக்கோடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் சுகாதார சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சாலை வசதி இல்லாத எளிதில் செல்ல முடியாத மலை கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கும் மருத்துவ சேவை கிடைப்பதை மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் உறுதி செய்திருக்கிறது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை 75 லட்சம் பேருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சென்றிடாத மலை கிராமங்களுக்கும் மருத்துவ சேவை தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் கிடைத்து வருகிறது.
நாள்தோறும் காலை நேரங்களில் நமக்கான நேரமாக ஒதுக்கிக் கொண்டு உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். உடற்பயிற்சி என்பதை நாள்தோறும் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். சரியான வயதில் தொடங்கும் யோகாப் பயிற்சி வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை தருகிறது என்று மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
அதன்பின், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 27-வது இளங்கலை மருத்துவ பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.