ஊழலுக்கு திமுக திராவிட மாடல், நேர்மைக்கு காமராஜர் மாடல் - ஜி.கே.வாசன்
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுக்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு இதுஎன்ன திமுகவின் பச்சோந்தி திராவிட மாடலா என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று சேலத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது. இதில் அக்கட்சியில் மாநில தலைவர் ஜி.கே வாசன் கலந்து கொண்டார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் உரையாற்றுகையில், தமிழகத்தில் மின்சார வாரியம் நஷ்டத்தில் இருக்கிறது என்று கூறுகிறார். இது எந்த விதத்தில் நியாயம் அதன் அடிப்படையில் விலை ஏற்றுவது இதுதான் திராவிட மாடலா என்று கேள்வி எழுப்பினர். வாக்குறுதி அடிப்படையில் மக்கள் வாக்களித்தார்கள், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மேலும் மக்களுக்கு சுமையை அதிகரிக்கிறீர்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுக்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு இதுஎன்ன திமுகவின் பச்சோந்தி திராவிட மாடலா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழக மக்களை எளிதில் ஏமாற்றி விடமுடியாது, நஷ்டமடைவதற்கு ஏழை எளிய மக்களா காரணம். மக்கள் மீது கைநீட்டுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும், நஷ்டம் கூடாது என்றால் மின்சார தடவாள பொருட்கள் வாங்கும்போது ஊழல் செய்யக்கூடாது,
வெளிமாநிலங்களில் மின்சாரம் கொள்முதல் செய்யும்போது லஞ்சம் வாங்க கூடாது இந்த பணிகளை முறையாக செய்தால் மின்சாரத்துறை நஷ்டத்தில் செயல்படாது. தமிழகத்தில் ஊழலுக்கு திமுக திராவிட மாடல், நேர்மைக்கு காமராஜர் மாடல்தான் வேண்டும். சாதாரண குடும்பத்தில் கூட அரசின் தவறான செயல்பாட்டால் ஐந்து லட்சம் பணம் செலுத்த வேண்டும் என்று ஷாக் கொடுக்கிறார்கள். இதுகுறித்து கேட்டால் தொழில்நுட்ப கோளாறு என்று எளிதில் கூறி முடித்து விடுகிறார்கள். ஆனால் இந்தமுறை உறுதியாக கட்டவேண்டும் என்று கூறுகிறார்கள். புதிய யுக்தியில் திராவிட மாடல் மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள்.
தமிழக அமைச்சர்களும் அதிகாரிகளும் விளக்கம் கொடுக்கும்போது யாருக்குமே புரியாது. தற்போது நூதனமுறையில் மக்கள் மீது சுமையை வைத்து ஏமாற்ற நினைக்கிறார்கள் இதுதான் திராவிட மாடல் என்பதில் மாற்றுகருத்து கிடையாது. கொரோனா தாக்கத்தைவிட, மின் கட்டண தாக்கம் மக்களை பெருமளவு பாதித்துள்ளது. மின்கட்டண உயர்வால் மின்கட்டணம் மட்டும் உயர்வதில்லை, வாடகை கட்டணம், பராமரிப்பு கட்டணம், வியாபார நிறுவனங்கள் பொருட்களின் விலையை உயர்த்துகிறார்கள், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்தது என பல்வேறு விலை உயர்வதற்கு காரணமாக மின் கட்டண உயர்வு உள்ளது. திராவிடமாடல் அரசுக்கு தெரிந்து, புரிந்து திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகின்ற திராவிடமடல் என்பதில் மாற்று கருத்து கிடையாது. காமராஜர் ஆட்சியில் அனைவரும் பாடம் படித்தனர். திமுக ஆட்சியில் தொடர்ந்து குடிக்க கற்றுக் கொள்கின்றனர். போதைப் பொருட்கள் பயன்பாடு, ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவைகளை தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருகின்ற அரசுதான் திராவிட மாடல் அரசு என்றும் பேசினார். திமுக எந்த மாடல் பேசினாலும், தமிழக மக்கள் உங்களை நம்பபோவதில்லை,
உங்கள் சாயம் வெளுத்துவிட்டது உங்களுடைய உண்மையான முகத்தை மக்கள் தெரிந்து கொண்டனர். இதற்கு வருகின்ற தேர்தலில் எதிர்மறை வாக்குகளால் பிரதிபலிப்பார்கள் என்பதில் மாற்றம் கிடையாது என்றும் கூறினார்.