(Source: ECI/ABP News/ABP Majha)
Chennai Meat Ban Update: தீபாவளியில் இறைச்சி விற்பனைக்கு தடை... மக்களின் கோரிக்கையும், மாநகராட்சியின் விளக்கமும்!
சென்னை: நவம்பர் 4ஆம் தேதி இறைச்சி விற்பனை தடை உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவெடுக்கப்படுமென சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நவம்பர் நான்காம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக மக்கள் தயாராகிவருகிறார்கள். ஆனால் அன்றைய தினம் மகாவீர் ஜெயந்தியும் வருவதால் இறைச்சி கடைகளை சென்னை மாநகராட்சியில் மூட வேண்டுமென தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் மகாவீர் நிர்வான் நாள் 04.11.2021 (வியாழக்கிழமை) அன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளையும் மூடிவைத்திருக்க பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மண்டலம் 5க்குட்பட்ட கோட்டங்கள் 49 முல் 63 முடிய உள்ள அனைத்து கோட்டங்களிலும் அமைந்துள்ள ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி கடைகளை 04.11.2021 (வியாழக்கிழை) அன்று மூடி வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. பல்பொருள் அங்காடிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்பனை செய்வது தடை செய்யப்படுகிறது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
தீபாவளி என்றாலே புத்தாடை மற்றும் பட்டாசு என்பதை தாண்டி இறைச்சி சமைப்பதும் வழக்கம் என்பதால் அரசின் இந்த உத்தரவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தீபாவளி தினத்தன்று இறைச்சி கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் நவம்பர் நான்காம் தேதி இறைச்சி விற்பனை தடை உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவெடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சமண மதத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் மகாவீர். சிறு வயதிலேயே எளிய வாழ்வின் மீது நாட்டத்தை செலுத்திய அவர், அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்காக அரசு குடும்பத்தில் பிறந்திருந்தாலும் குடும்ப வாழ்க்கையை துறந்து துறவி ஆனார்.
அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும், எந்த உயிரையும் துன்புறுத்தவோ, கொல்லவோ கூடாது போன்ற நன்னெறிகளை அவர் மக்களிடம் எடுத்துரைத்தார். மகாவீர் தனது 72ஆவது வயதில் காலமானார். அவரது நினைவு நாள் மகாவீர் ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: திமுக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ராஜினாமா: பதவிக்கு ரூ.1.50 கோடி நிர்வாகி யார்?
‛சமூக நீதிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் தேவர்...’ -பிரதமர் மோடி புகழாரம்!