திமுக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ராஜினாமா: பதவிக்கு ரூ.1.50 கோடி நிர்வாகி யார்?
‛‛முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக தான் இந்த ராஜினாமா செய்யப்பட்டுள்ளது,’’
சமீபத்தில் தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதில், திமுக சார்பில் 11 பேர், அதிமுக சார்பில் 5 பேர், காங்கிரஸ் சார்பில் ஒருவர் வெற்றி பெற்றனர். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு நடந்த மறைமுகத் தேர்தலில் 10-வது வார்டு உறுப்பினர் செல்லம்மா என்பவர் 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட 13-வது வார்டு உறுப்பினர் ஜெயக்குமார் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ஜெயக்குமாரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் திடீரென செல்லம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக உறுப்பினர்களின் ஆதரவோடு செல்லம்மாள் வெற்றி பெற்றதாகவும், இவரை தேர்ந்தெடுக்க திமுக ஒன்றியச் செயலாளர் குமார் ஏற்பாடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பில் இருந்து ஒன்றியச் செயலாளர் குமார் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஒன்றியக்குழு தலைவர் செல்லம்மாள் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹெலனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்.
இதன் பின்னணியில், கட்சி சார்பில் முன்மொழியப்பட்ட வேட்பாளர், மாவட்ட நிர்வாகி ஒருவருக்கு பெருந்தொகை கொடுத்ததாகவும், அவரை எதிர்த்து போட்டியிட்டு செல்லம்மா ஜெயித்ததால், செல்லம்மாளிடம் அந்த தொகையை மாவட்ட நிர்வாகி ஒருவர் கேட்பதாகவும், அந்த அழுத்தம் காரணமாக செல்லம்மாள் ராஜினமா செய்ததாக கூறப்படுகிறது. பதவியேற்று ஒரு மாதம் கூட நிறைவு பெறாத நிலையில் ராஜினாமா செய்துள்ள சம்பவத்தின் பின்னணியில் பெரிய அரசியல் நகர்வு இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து செல்லம்மாளை தொடர்பு கொள்ள முயன்றோம். அவருக்கு பதிலாக அவரது கணவர் முருகேசன் ABP நாடு இணையத்திற்கு பேசினார்....
‛‛எல்லாம் கட்சி விவகாரம் தான். நான் தொடக்கத்தில் இருந்தே திமுகவில் இருக்கிறேன். பரிந்துரைக்கப்பட்ட திமுக வேட்பாளர் மீது அனைத்து சமுதாய அதிருப்தி இருந்தது. புகார்கள் இருந்தது. அதனால் தான் என் மனைவிக்கு கவுன்சிலர்கள் வாக்களித்தனர். ஏன் ராஜினாமா செய்தேன் என்பதை இப்போது என்னால் கூறமுடியாது. முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக தான் இந்த ராஜினாமா செய்யப்பட்டுள்ளது. அவர் கண்டிப்பாக என் மனைவியை அழைத்து பேசுவார் என்று நம்புகிறேன். அவர் சந்திக்கும் போது, அவரிடம் அனைத்தையும் கூறுவேன். கட்சிக்கு கட்டுப்பட்டு இப்போது என்னால் வேறு எதையும் கூற முடியாது. என் மனைவி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை தான் ராஜினாமா செய்துள்ளார்; கவுன்சிலர் பதவியை அல்ல. மாவட்ட ஆட்சியரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளோம். அவர் ஏற்கிறாரா... இல்லையா... என்பது அவரது முடிவில் தான் உள்ளது,’’ என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்