(Source: ECI/ABP News/ABP Majha)
Priyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்
வயநாடு இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிரியங்கா காந்தி வயநாடு மக்களுக்கும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி வெற்றி பெற்று ராஜினாமா செய்த வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார். இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முதலிடத்தில் உள்ளார். வயநாட்டில் மீண்டும் காங்கிரஸே ஆட்சியை பிடித்துள்ளது
இந்நிலையில் வயநாடு இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில்,
எனது அன்பான வயநாடு சகோதர சகோதரிகளே!
நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் கொண்டுள்ள நன்றியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. காலப்போக்கில், எனது இந்த வெற்றியை உங்களது வெற்றியாக நீங்கள் உணர்வீர்கள், உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்துகொண்டு உங்களுக்காக போராடுவதை நான் உறுதி செய்வேன். நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக நான் இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!
இந்த மரியாதையையும் உங்களின் அலாதி அன்பையும் எனக்கு வழங்கியதற்கு நன்றி!
UDF இல் உள்ள எனது சகாக்கள், கேரள தலைவர்கள், தொழிலாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் இந்த பிரச்சாரத்தில் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்த எனது அலுவலக சகாக்கள், உங்கள் அனைவரின் ஆதரவிற்கு நன்றி. ஒரு நாளைக்கு 12 மணிநேரம் உணவு இன்றி, ஓய்வின்றி எனக்காக பாடுபட்டீர்கள் உழைத்தீர்கள்…நமது லட்சியங்களுக்காக உண்மையான வீரர்களைப் போல போராடியதற்கு நன்றிகள்!
எனது அம்மா சோனியா, கணவர் ராபர்ட் மற்றும் எனது இரு செல்வங்கள் ரைஹான் மற்றும் மிரயா நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும் தைரியத்திற்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றிகள் கூறினாலும் ஈடாகாது.
எனது அண்ணன் ராகுல்..நீங்கள் தான் அனைவரை விடவும் தைரியசாலி..என்னை கைபிடித்து அழைத்து செல்வதற்கும் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருப்பதற்கும் நன்றி அண்ணா..என பிரியங்கா காந்தி தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவை தேர்தலில் வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி மொத்தம் 6,42,299 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதில் ராகுல் காந்தி 3,61,705 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தை பெற்றிருந்தார். ஆனால் தற்போது 3,72,883 வாக்குகள் வித்தியாசத்தில் நின்று அண்ணனை மிஞ்சிவிட்டார் பிரியங்கா!