(Source: ECI/ABP News/ABP Majha)
Maharastra CM : ஷிண்டே vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?
மஹாராஸ்டிராவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி கண்டுள்ள நிலையில், தற்போது மஹாராஸ்டிர முதல்வர் அரியணை யாருக்கு என்பது குறித்த பரபரப்பு உருவாகியுள்ளது.
ஆளும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா, அஜித் பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸ், பாஜகவை உள்ளடக்கிய மகாயுடி கூட்டணிக்கு போட்டியாக உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா, காங்கிரஸ், சரத்பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி சட்டசபை தேர்தலை சந்தித்தது. மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், பாஜக கூட்டணியானது மிகப் பெரிய வெற்றியை எட்டியுள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக பாஜக கூட்டணி ஆட்சி அமைத்திருந்த நிலையில், தற்போது தனியாகவே ஆட்சி அமைக்கும் பலத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் யாருக்கு முதல்வர் அரியனை என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த பாஜக ஆட்சியில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக இருந்தார். ஆனால் தற்போது பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளதால் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக வரும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, பாஜக கட்சியானது, கூட்டணியில் உள்ள சிவசேனா தயவின்றி ஆட்சியை அமைக்க முடியும் என்பதால், பாஜக கட்சியில் இருந்துதான் முதலமைச்சர் இருப்பதற்கான அதிகம் வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்ததாவது, “ எங்கள் கூட்டணியானது, இதுகுறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜக செய்தி தொடர்பாளர் பிரவின் தரேகர் தெரிவிக்கையில். "இந்த முடிவானது, எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் வெற்றி பெறுவோம் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் இவ்வளவு பெரிய முடிவை எதிர்பார்க்கவில்லை. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக வருவார் என்று நான் நினைக்கிறேன்," என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவின் தரேகர் தெரிவித்தார்.இந்நிலையில் நாளை பாஜக கூட்டணி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் , முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்படுவாரா அல்லது ஷிண்டேவே தொடர்வாரா என தெரிந்துவிடும். சில சமயங்களில், மிகவும் பரீட்சையம் இல்லாத நபரை பாஜக முன்னிறுத்தும்; இதுபோன்ற திட்டத்தை கையாளுமா என்பது நாளை தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.