Driving Class: காசே இல்லாமல் கார் ஓட்ட கத்துக்கலாமா? எப்படி அப்ளை பண்றது? முழு விவரம்
தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சி அளிக்க உள்ளது. தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது.
கார் ஓட்டுநர் பயிற்சி:
இதன்படி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 45 நாள் இலகுரக வாகனம், கனரக வாகனம் மற்றும் 30 நாள் போர்க்லிப்ட் ஆபரேட்டர் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கார் ஓட்டுநர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். முதற்கட்டமாக இந்த திட்டத்திற்காக தஞ்சை, மறைமலைநகர் மற்றும் செங்குன்றம் ( ரெட்ஹில்ஸ்) ஆகிய இடங்களில் பயிற்சி இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் உள்நாட்ட மற்றும் சர்வதேச அளவில் வாகன ஓட்டுனர் வேலைவாய்ப்புகளை பெற இந்த பயிற்சி பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று தமிழக அரசு நம்புகிறது. தகுதியுள்ள பயனாளிகள் அரசின் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இன்டர்ன்ஷிப்:
மேலும், இளங்கலை படிப்பை முடித்த 21 வயது முதல் 24 வயது வரையிலான இளைஞர்களுக்கு தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் விதமாக 12 மாத இன்டர்ன்ஷிப் வாய்ப்பையும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக மாதந்தோறும் ரூபாய் 5 ஆயிரம் ஸ்டைபண்ட் எனப்படும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பாலிடெக்னிக், ஐடிஐ, டிப்ளமோ, ஏதேனும் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும். ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
இந்த திட்டங்கள் மற்றும் பிற திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள www.naanmudhalvan.in.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.