(Source: ECI/ABP News/ABP Majha)
BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
BJP Congress: பாஜகவின் வெற்றிக்கு காரணமாக அமையும் காங்கிரசின் பலவீனம், எதிர்க்கட்சிகளின் I.N.D.I. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
BJP Congress: பாஜகவின் வெற்றிக்கு காரணமாக அமையும் காங்கிரசின் பலவீனம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
மகாராஷ்டிராவில் கோட்டைவிட்ட I.N.D.I. கூட்டணி:
பெரிது எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் I.N.D.I. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. அதேநேரம், பலரும் கணித்தபடி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றினாலும், யாரும் எதிர்பார்க்காத விதமாக 230-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I. கூட்டணி சொற்ப இடங்களில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. மிக முக்கியமான மற்றும் பெரிய மாநிலங்களில், பாஜக வெற்றியை தொடர்வதும், எதிர்க்கட்சிகள் கோட்டைவிடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
அண்மைக்கால தேர்தல் முடிவுகள்:
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஹரியானாவில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கும் வெற்றி வாய்ப்பை இழந்தது. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. ஜம்மு & காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில் கூட மாநில கட்சிகளின் ஆதரவிலேயே காங்கிரஸ் குறிப்பிட்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. மக்களவை தேர்தலிலும் பல மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை மறுக்க முடியாது.
குட்டையை குழப்பும் காங்கிரஸ்:
பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு 'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இணையாமல் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்ததே காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில தேர்தல் முடிவுகள் ’இந்தியா’ கூட்டணியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் கூட, இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுக்கு எதிராக களமிறங்கியது. கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலின் போது, கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எதிராகவே காங்கிரஸ் வேட்பாளர்களை களமிறக்கியது. இதனால், கூட்டணியில் ஒரு தெளிவான இலக்கு இல்லை என்பது சராசரி மனிதனால் கூட உணர முடிகிறது.
பாஜகவிற்காக உழைக்கும் காங்கிரஸ்:
கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகவே வேட்பாளர்களை களமிறக்குவதால், வாக்குகளை பிரிக்கும் பணிகளை காங்கிரஸ் திறம்பட செயல்படுகிறது. இப்படி வாக்குகள் பிரிவது ஹரியானா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பாஜகவிற்கு பெரும் சாதகமாக அமைகிறது. மேலும், கூட்டணிக்கு தெளிவான இலக்கு இல்லாததால், மக்களிடையே நம்பகத்தன்மையையும் பெறமுடியவில்லை. இதுபோக காலம் காலமாக காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பூசலும், பாஜகவிற்கு சாதகமான சூழலையே வடமாநிலங்களில் தோற்றுவிக்கிறது. அதோடு, காங்கிரசின் 60 ஆண்டுகால ஆட்சியின் தவறுகளும், பாஜகவிற்கு பல குற்றச்சாட்டுகளை முன்வைக்க வாய்ப்புகளை தாராளமாக வழங்குகிறது.
காந்தி குடும்பத்தின் தவறுகள்:
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே, காந்தி குடும்பத்தை சாராத நபராக மல்லிகர்ஜுனா கார்கே தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், இதுநாள் வரை அவர் காந்தி குடும்பத்தின் கைப்பாவையாக இருக்கிறார் என்பதையே பல சந்தர்ப்பங்களில் உணர்த்தியுள்ளார். முக்கியமான செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட, கார்கேவை ஓரமாக அமரவத்துவிட்டு ராகுல் காந்தியே பேசிவருகிறார். கட்சியை அடிமட்டத்திலிருந்து வலுவாக்க ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதையும் எடுத்ததாக தெரியவில்லை. உட்கட்சி பூசலை ஒழிப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கைகளையும் காணமுடியவில்லை. கூட்டணி கட்சிகளுடன் ஒத்துப்போகவும், கள எதார்த்திற்கு ஏற்றவாறு இடங்களை பெற்று போட்டியிடவும் கூட கட்சி தலைமை தயாராகவில்லை. எந்த இடத்தில் தங்கள் கை ஓங்கி இருக்க வேண்டும், எங்கு விட்டுக் கொடுத்து கூட்டணி கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதிலும் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்துவதில்லை. ஆளும் கட்சி என்ற நிலையில் இருந்து, ஒரு காலத்தில் ஆண்ட கட்சி என்ற நிலைக்கு மாறிவிட்டோம் என்ற உண்மையை தன்மையை உணராத வரை காங்கிரஸ் கட்சியால் மீண்டு வரவே முடியாது.
காங்கிரஸ் அழிய வேண்டுமா?
தமிழ்நாட்டில் எப்படி அதிமுக இருக்கும்வரை திமுகவை அழிக்கவே முடியாது என்று கூறப்படுகிறதோ, அதேவகையில் தேசிய அரசியலில் காங்கிரஸ் இருக்கும் வரை பாஜகவை அசைக்க முடியாது. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து காங்கிரஸ் செய்த தவறுகள் மற்றும் ஊழல்களை சுட்டிக்காட்டியே, மூன்றாவது முறையாகவும் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. அந்த கட்சியை வீழ்த்தி மாற்று அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டுமானால், காங்கிரஸ் முற்றிலும் தன்னை மறுசீரமைக்க வேண்டும். இல்லையேனில் காலங்கள் உருண்டோடும் வேகத்தில், காங்கிரஸ் எனும் கட்சி காற்றோடு காற்றாக கரைந்துவிடும் என்பதே உண்மை. மகாராஷ்ராவில் தோல்வியை கண்டுகொள்ளாமல் பிரியங்கா காந்தியின் வெற்றியை கொண்டாடுவதை போன்ற தவறுகளை திருத்தாதவறை, காங்கிரஸ் மீண்டும் வலுப்பெறுவது என்பது சாத்தியமில்லாத நிகழ்வே ஆகும்.