கோயில்களை தனியாரிடம் தூக்கிக் கொடுக்க முடியாது; திமுக ஆட்சியிலும் அதுவே தொடரும்- திமுக எம்.பி., செந்தில்குமார் சிறப்பு பேட்டி
கோயில்களை இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து விடுவித்து தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஜக்கி வாசுதேவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், திமுக ஆட்சி அமைந்ததும் ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன் எனவும் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி அமைந்தபிறகும் கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையிடமே இருக்கும் என்றும், ஜக்கி வாசுதேவ் கேட்பதுபோல தனியார் வசம் ஒப்படைக்க முடியாது எனவும் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு செந்தில்குமார் அளித்துள்ள சிறப்பு பேட்டி
- கேள்வி : கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை வசமிருந்து மீட்டு இந்துக்களிடமே கொடுக்க வேண்டும் என சத்குரு ஜக்கி வாசுதேவ் பரப்புரை மேற்கொண்டு வருகிறாரே ?
பதில் : கோயில்கள் அரசிடமிருந்து மீட்கப்படவேண்டுமென்றால், மீட்டு அவரிடம் தர வேண்டும் என்கிறாரா ?, ஈஷா என்ற ஒரு இடத்திலேயே பிரபலங்கள், அரசியல்வாதிகள், ஆளுநர் என அழைத்து கோடி கணக்கில் பணம் பார்த்து ருசி கண்டுவிட்டார். ஒரு இடத்தில் செய்வதை தமிழகம் முழுவதும் செய்தால் எவ்வளவு பணம் பார்க்கலாம் என்ற ஆசையில் ஜக்கி வாசுதேவ் இந்து கோயில்களை மீட்க வேண்டும் என்று குரல் எழுப்புகிறார் அவ்வளவுதான்.இப்போது இந்து சமய அறநிலையத்துறை வசமுள்ள கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு கட்டணமாக மிக குறைந்த தொகையே வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், இது ஜக்கி வாசுதேவ் போன்றோர்கள் வசம் சென்றால் லட்சக்கணக்கான ரூபாய்களை கட்டணமாக நிர்ணயித்து, கோயில்களை பணக்காரர்களுக்கானதாக மட்டுமே மாற்றிவிடுவார்கள். இவ்வளவு நாள் தமிழ்நாட்டில் இருந்த ஜக்கி வாசுதேவ், இப்போது திடீரென கோயில்கள் மீது கரிசனம் கொள்வது ஏன் ? மகா சிவராத்திரி, காவிரி Calling போன்று இவர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் வந்த கோடிக்கணக்கான பணத்தில் சிதலமைடந்து போயிருக்கிற அல்லது பழமையான கோயில்களை சீரமைக்க எவ்வளவு ரூபாய் இதுவரை செலவழித்திருக்கிறார் ?தமிழ்நாட்டில் உள்ள கோயில்களையெல்லாம் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்து கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றும் வாசுதேவின் முயற்சிதான் இது.
மற்றவர்களை காட்டிலும் கடவுளின் பெயரை சொல்லி மக்களிடம் ஏமாற்றி பணத்தை வசூலித்துக்கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான் பெரிய கடவுள் மறுப்பாளர்கள். கடவுள், சமூக சேவை, நதிகள் இணைப்பு என்ற பெயரில் மக்களின் பாக்கெட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை நூதனமாக திருடும் வேலையைதான் இவர் செய்கிறார். சிவராத்திரி கொண்டாட்டம் என்று சொல்லிவிட்டு கிளப் மாதிரி இரவு 10 மணிக்குமேல் காடு சூழந்த அந்த இடத்தில் ஹை டேசிபல் ஸ்கீப்பர்கள் வைத்து ஆட்டம் போடுகிறார்கள். இதை அரசும் வனத்துறையும் எப்படி அனுமதிக்கிறது என தெரியவில்லை.
- கேள்வி : இந்து கோயில்களை மட்டும் அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றீர்களே இதுபோன்று பிற மதத்தினர் கோயில்களை உங்களால் அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியுமா ?
பதில் : இந்து சமயத்தினருக்கு பல்வேறு பெயர்களில், பல்வேறு தெய்வங்கள் இருக்கின்றன. ஒரு தெருவில் கூட நான்கைந்து கோயில்கள் இருக்கும். ஆனால், பிற சமயத்தினர் ஆலயங்கள் தமிழ்நாட்டில் மிகவும் குறைவு. அதனை நிர்வகிக்க அவர்களுக்குள் ஓர் அமைப்பு இருக்கிறது. அங்கு தவறு நடக்கும் பட்சத்தில் அதனையும் அரசு கவனத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கும் ; ஏற்கனவே பல பிரச்னைகளில் எடுத்தும் இருக்கிறார்கள். ஆனால் வாசுதேவ் போன்றவர்கள் பல அமைப்புகளாக செயல்படுகிறார்கள். இவர்களில் யாரிடம் இந்து கோயில்களை ஒப்படைக்க முடியும் என நீங்களே சொல்லுங்கள்.
- கேள்வி : ஆன்மிகம் இல்லாமல் திராவிட கலாச்சாரமே கிடையாது. தஞ்சை பெரியகோயில் கட்டிய இராஜராஜசோழனைவிடவும் நீங்கள் பெரிய திராவிடர்களா என ஜக்கி வாசுதேவ் உங்களை பார்த்து கேட்கிறாரே ?
பதில் : இங்கு தன்னை திராவிடர்கள் என அடையாளப்படுத்திக்கொள்ளும் 99 சதவீதத்தினர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். இந்த மாதிரி அவர் விமர்சிக்கிறதெல்லாம் கோயில் சொத்துக்களை அபகரிக்கவும், கூடுதலாக சொத்துக்களை சேர்த்துக்கொள்வதற்கும்தான். ஒன்னுமே இல்லாம இருந்த இவருக்கு இவ்வளவு சொத்து எப்படி சேர்ந்தது ? ஈஷா கட்டியுள்ள இடத்திற்கு அனுமதி இருக்கிறதா ?
- கேள்வி : இப்படி அடுக்கடுக்கான புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் ஜக்கி வாசுதேவ் மீது வைக்கும் நீங்கள், திமுக ஆட்சி அமைந்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா ?
பதில் : சிரிக்கிறார்… நான் தனிப்பட்ட முறையில் ஜக்கி மீது நடவடிக்கை எடுக்க சொல்லி வலியுறுத்துவேன். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
- கேள்வி : சரி, புதிதாக ஆட்சி அமைக்கபோகும் அரசு இந்து கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்கவேண்டும் என்று சொல்கிறாரே ? திமுக ஆட்சி அமைந்தால் இந்து சமய அறநிலையத்துறை வசமிருக்கும் கோயில்களை அவர்களிடமே ஒப்படைப்பீர்களா ?
பதில் : அதற்கு வாய்ப்பே இல்லை. ஏன் என்றால் இந்து கோயில்களை பாதுகாத்ததே திராவிட இயக்கங்கள்தான். இவ்வளவு நாள் பாதுகாத்துவிட்டு இவர்கள் கேட்பதனாலேயே தூக்கி கொடுத்துவிட மாட்டார்கள். அப்படி கொடுத்தால் சாமி என்பதே சாமனியனுக்கு எட்டாத கனிபோன்று ஆகிவிடும், அதேபோல், அது தவறான முன்னுதாரணமாகவும் போய்விடும். இவர் கேட்பதெல்லாம் காப்பரேட் சாமியார்கள் வளர்வதற்குதான்.