‛வசைபாடி வாங்கிய வாய்ப்பு... வருவாய் ஈட்டுவதில் ஏய்ப்பு...’ யார் இந்த விஜயபாஸ்கர்?
சட்டசபையில் ஒரே ஒருநாள் கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோரை இழிவாக பேசிய ஒற்றை காரணத்துக்காகவே அமைச்சர் பதவியை தூக்கி கிஃப்டாக கொடுத்தார் ஜெயலலிதா.
அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு ஊழல் முறைகேடு வழக்குகளில் சிக்கி எந்த நேரத்திலும் அமைச்சர் பதவி பறிபோகலாம் என்ற நிலையில் இருந்தவர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்ய லஞ்சம், சட்டவிரோதமாக குவாரிகள் நடத்தியதில் முறைகேடு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பணப்பட்டுவாடா விவகாரம் என சி.பி.ஐ, வருமான வரித்துறையினருக்கு புதியவர் இல்லை தான் சி. விஜயபாஸ்கர்.
இதற்காக பல முறை விசாரணைகளை குடும்பத்துடன் எதிர்கொண்டும் இருக்கிறார். ஆனால் அதெல்லாம் அவர்களின் சொந்த ஆட்சியில் என்பதால் விஷயம் அவ்வளவு பெரிதாக இல்லை. ஆனால் தற்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 27 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை உடும்பு பிடியாக பிடித்துள்ளார்கள் சி. விஜயபாஸ்கரை. இன்று காலை முதல் விஜயபாஸ்கர், அவரது பினாமிகளான உறவினர்கள் வீடுகள் புதுக்கோட்டை, ஆலங்குடி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சரின் நெருங்கிய கட்சி பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், கல்வியாளர்கள் வீடுகள் என மாவட்டத்தில் 23-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இவை உட்பட தமிழகத்தில் 43 இடங்களில் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சாதாரண எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயபாஸ்கார், சட்டசபையில் ஒரே ஒருநாள் கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோரை இழிவாக பேசிய ஒற்றை காரணத்துக்காகவே அமைச்சர் பதவியை தூக்கி கிஃப்டாக கொடுத்தார் ஜெயலலிதா. 2013-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி சட்டசபையில் துணைநிலை நிதி மசோதா மீது விவாதம் நடந்து கொண்டிருந்தது. விராலிமலை சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயபாஸ்கருக்கும் பேச வாய்ப்பு தரப்பட்டது. அப்போது, "மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளைப் போராடி வெற்றிகண்ட இன்ஸ்பெக்டர் லட்சுமணனை மருத்துவமனைக்கே சென்று ஆறுதல் சொல்லி, 15 லட்சம் ரூபாயை ரொக்கப் பரிசாக அளித்த ஜெயலலிதா, காவலர்களுக்கெல்லாம் காவலராக விளங்குகிறார்கள். இதைக் கண்டு பொறுக்காத ஒரு தள்ளு வண்டி எனக்கு உடன்பாடில்லை என்று கட்டுரை எழுதுகிறது. காக்கிச் சட்டைகளுக்கு உயர்வு அளித்தால் களவாணிகளுக்கு எரிச்சல்தானே வரும்." என்று கலைஞர் கருணாநிதியை, ஒரு முதுபெரும் தலைவரை தள்ளுவண்டி என்று குறிப்பிட்டபோது, முதல்வராக சபையில் அமர்ந்திருந்த ஜெயலலிதா உட்பட அதிமுகவினர் அனைவரும் மேஜையைத் தட்டி விஜயபாஸ்கரின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதாவது முதுமையினால் அப்போது கருணாநிதி வீல் சேரில் பயணித்து வந்தார். அதனைத்தான் கிண்டலாக தள்ளுவண்டி என்று விஜயபாஸ்கர் அரசியல் நாகரிகம் என்பது கிஞ்சித்துமின்றி சட்டசபையிலே உரையாற்றினார்.
விஜயபாஸ்கரின் இந்த விமர்சனத்துக்கு அன்று தி.மு.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் விஜயபாஸ்கர் யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாகத்தான் சொன்னார் என்று அன்றைக்கு சபை முன்னவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கதைகளை கூறிக்கொண்டிருந்தார். அத்துடன் ஓயவில்லை விஜயபாஸ்கரின் அநாகரிக பேச்சு. மற்றொரு திராவிட கட்சியின் தலைவரான விஜயகாந்தை பற்றியும் இழிவாக பேசினார். அதில் "கோயம்பேடு ஃபயர் ஒர்க்ஸ் என்று ஒரு கடை உள்ளது. இந்தக் கடையை மச்சான்கிட்ட விட்டுவிட்டு, முதலாளி 'ரவுண்டு'க்குப் போய்விட்டார். மச்சான்கிட்ட வெடி வாங்கி பற்றவைத்தாலும் 'சத்தமாக' வெடிக்க வேண்டிய வெடி 'மொத்தமாக' வெடிக்கவில்லை. வெடி எப்போதும் தண்ணீரிலேயே இருந்ததால் முழுவதும் நமத்துப் போய்விட்டது என்றார்." அதாவது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மதுபோதையிலேயே இருப்பதை குறிப்பிட்டு மிகவும் கிரியேட்டிவாக சிந்தித்து தண்ணீர் வெடி என்று சத்தம், மொத்தம் போன்ற ரைமிங் எல்லாம் சேர்த்து பேசினார். இந்த பேச்சை கேட்ட ஜெயலலிதா குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது அரசியல் அநாகரிகத்தின் உச்சம்.
விஜயபாஸ்கரின் இந்த சர்ச்சை பேச்சுகளுக்கு மறுநாள் 2013-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி ஆளுநர் மாளிகை ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. அப்போதெல்லாம் திடீர் திடீர் என அமைச்சர்களை மாற்றும் பழக்கம் ஜெயலலிதாவிடம் இருந்தது. ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் சுகாதாரத்துறை அமைச்சராக டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதவியேற்கவிருக்கிறார் என குறிப்பிடப்பட்டிருந்தது. கருணாநிதி, விஜயகாந்தை இழிவாக பேசிய ஒற்றை காரணத்துக்காகவே விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. அப்படி அரசியல் நேர்மையுடனும் கண்ணியத்துடனும் அமைச்சரான விஜயபாஸ்கர் ஆட்டமும் அன்று முதல் ஆரம்பமானது. அமைச்சரானது முதலே சொத்துகளை குவிக்கும் வேகத்தை பலமடங்காக அதிகரித்தார், குவாரி, குட்கா என முறைகேடுகள் பற்பல செய்து, கிடைக்கும் இடங்களிலெல்லாம் கமிஷன் அடிக்க ஆரம்பித்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. அவரது ஊழல் திறனால் மீண்டும் அவருக்கே 2016ல் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி கிடைத்தது என்றும், அம்மாவின் இறப்புக்கு பின்பும் அந்த கட்சி அந்தஸ்த்தை ஓபிஸ் மற்றும் ஈபிஎஸ் இடம் இருந்து பெற தவறவில்லை என்றும் அவரை விமர்சிப்பவர்கள் உண்டு. அதே சுகாதாரத்துறை அமைச்சர் பதவியையும் அவர் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருந்தார். ஆனாலும் கில்லாடியாக எவ்வளவு கேஸ் போட்டாலும் லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்துவந்த விஜயபாஸ்கர் தற்போது நறுக்கென்று கொட்டிய தேளிடம் சிக்கிக்கொண்டது எப்படி?
2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது ரூ.6 கோடியே 41 லட்சம் வருமானம் இருப்பதாக விஜயபாஸ்கர் தனது தேர்தல் வேட்பு மனுவில், வருமான வரித்துறை கணக்கிலும் கணக்கு காண்பித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது ரூ.58 கோடி வருமானம் இருப்பதாக கணக்கு காண்பித்துள்ளார். அதோடு செலவு போக 51 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறியுள்ளார். இதை அவரேதான் தேர்தல் ஆணையத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் வெளியிட்டு இருக்கும் இந்த டேட்டாதான் அவருக்கே சிக்கலாக முடிந்துள்ளது. அவர் தனது வருமான வரித்துறை தாக்கல் கணக்கிலும், வேட்பு மனு தாக்களிலும் செலவு கணக்கு செய்தாக ரூ.34 கோடி கணக்கு காண்பித்துள்ளார். கணக்குபடி அவர் 24 கோடி ரூபாய்க்கு மட்டும்தான் சொத்துக்கள் வாங்கி இருக்க முடியும். அதாவது மொத்த வருமானம் 58 கோடி ரூபாயில் செலவு கணக்கு ரூ.34 கோடியை காண்பித்துள்ளார். மீதம் உள்ளபடி 24 கோடி ரூபாய்க்கு மட்டும்தான் சொத்துக்கள் வாங்கி இருக்க முடியும். ஆனால் தனக்கு 51 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக சொத்து கணக்கு காட்டி இருக்கிறது. செலவு போக மீதம் இருப்பதே 24 கோடி ரூபாய்தான் எனும் போது எப்படி 51 கோடி ரூபாய் சொத்து சேர்த்து இருக்க முடியும் என்பதுதான் வழக்கே. இந்த மீதமுள்ள 27 கோடி ரூபாய் வரையிலான சொத்து எப்படி வாங்கப்பட்டது என்ற கணக்கு இல்லாத காரணத்தால் இந்த ரெய்டு நடப்பதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை எல்லாம் மனைவி பெயரிலும், பினாமி பெயரிலும் வாங்கியதாக விஜயபாஸ்கர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.