Anna Birthday | அண்ணா தனியொரு தலைவர் என கொண்டாடப்படுவது ஏன்?
பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் இன்று. 1967-இல் தமிழக அரசியலில் திராவிடம் மலரக் காரணமாக இருந்தவர். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தமிழகத்தை காங்கிரஸ் ஆண்டு வந்தது.
பேரறிஞர் அண்ணாவின் 110 வது பிறந்தநாள் இன்று. 1967ல் தமிழக அரசியலில் திராவிடம் மலரக் காரணமாக இருந்தவர். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தமிழகத்தை காங்கிரஸ் ஆண்டு வந்தது. 1949ல் தந்தை பெரியாரின் திராவிடர் கழத்திலிருந்து விலகிய அண்ணா திமுகவை தொடங்கினார். தனித் தமிழகம் என்ற பெரியாரின் முன்னெடுப்பே அண்ணா திமுகவைத் தோற்றுவிக்க தனிப்பெருங் காரணமாக இருந்தது என்பது வரலாறு.
அடுத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அண்ணா
அண்ணா சாதி, மதங்களைக் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுவதற்குக் காரணம் அவர் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மாண்பே காரணம். ஒருமுறை பெரியாருக்கு ஒரு திருமண அழைப்பிதழ் வந்தது. சுயமரியாதைத் திருமணத்தை மன்னார்குடியில் தலைமையேற்று நடத்த வந்த அழைப்பு அது. ஆனால் பெரியார் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்டதால் அவர் அண்ணாவை அழைத்து அந்தத் திருமணத்துக்குச் செல்லுமாறு கூறினார். திருமணத்தை 9 மணிக்கு நடத்திவைப்பதாக இருந்தது. அப்போது அண்ணா பெண் வீட்டார் பற்றி விசாரித்தார். பெண்ணின் தந்தை சாஸ்திர சம்பிரதாயங்களை விரும்புபவர். ஆனால், மணமகன் சுயமரியாதைத் திருமணம் என்று கூறியதால் மணமகளின் தந்தை வேறுவழியின்றி முகூர்த்த நேரத்தை விட்டுக் கொடுத்ததாகக் கூறினர். அண்ணாவுக்கு மணமகளின் தந்தையின் மனம் நோகக் கூடாது என்று தோன்றியது. இதனையடுத்து அண்ணா தான் 12 மணிக்குத்தான் திருமணத்து வர முடியும் என்று சொல்லி அனுப்பினார். இதனால் திருமணம் மணமகளின் தந்தை விருப்பப்படி முகூர்த்த நேரத்தில் நடந்தது. இந்த ஒரு சம்பவமே போது அண்ணா அடுத்தவரின் உணர்வுகளுக்கு எவ்வளவு மரியாதை கொடுப்பவர் என்பதைப் பறைசாற்றுவதற்கு
அண்ணா முதல்வரான இரண்டே ஆண்டுகளில் மெட்ராஸ் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றினார். சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கினார். இருமொழிக் கொள்கையை அமல்படுத்தினார். 1967 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்று கண்டது. அண்ணாவுக்கு காமராஜர் தோற்றுப்போவதில் விருப்பமில்லை. அதனால் 1968 நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜருக்கு எதிராக திமுக வேட்பாளரை அறிவிக்காமல் விட்டார். அதேபோல் ஆர்.வெங்கடராமன் திட்டக் கமிஷன் உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது அவர் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்கு செய்த நன்மைகளைக் கவுரவிக்கும்விதமாக அவருக்கு பிரம்மாண்ட பிரிவு உபச்சார நிகழ்ச்சியை நடத்தினார். அவரின் இந்தச் செயல் அண்ணாவை மாபெரும் தலைவர் என்பதை அடையாளப்படுத்தியது.
1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி அண்ணா உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரலாறு காணாதகூட்டம் கூடியது. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கும் மக்கள் வெள்ளம் திரண்டிருந்தாலும் கூட அது அண்ணாவிற்கு வந்த கூட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாதததாக இருந்தது
இன்று தமிழக அரசியலில் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக என பல்வேறு கட்சிகள் இருக்கலாம். ஆனால், அனைத்துக் கட்சியினருமே தலைவராகக் கொண்டாடுவது பேரறிஞர் அண்ணாவைத்தான். அதுதான் அண்ணா விட்டுச்சென்ற இடம். தலைமுறைகளைக் கடந்து அண்ணா தலைவராகவே இருக்கிறார்.