தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சேவை செய்வதாக திருமாவளவன் குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியினருக்கு சேவை செய்யும் நிறுவனமாக உள்ளது என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்களும் காலை முதல் பொதுமக்களுடன் இணைந்து வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க. தலைவர் திருமாவளவன் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் அங்கனூரில் காலையில் வாக்களித்தார்.
பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன், “ பா.ஜ.க.வின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில் தமிழக மக்கள் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது வரவேற்கத்தக்கது. அமைச்சர் ஜெயக்குமார் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது கண்டிக்கத்தக்கது.
அப்படி பார்த்தால், அ.தி.மு.க. அமைச்சர்கள் போட்டியிடும் அனைத்தும் தொகுதிகளின் தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் அனைத்து தேர்தல் நடத்தை விதிகளையும் மீறி, அ.தி.மு.க. செயல்படுவது கண்கூடாக தெரிகிறது.
தேர்தல் ஆணையம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுங்கட்சியாக இருப்பவர்களுக்கு சேவை செய்யும் நிறுவனமாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் என்பது தேர்தலை நடத்தித் தரக்கூடிய ஒரு நிறுவனமாகவே உள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல்களை கட்டுப்படுத்தும் ஒரு தன்னாட்சி அமைப்பாக இல்லாதது வேதனை அளிக்கும் செயலாகும்.
தி.மு.க. கூட்டணி 100 சதவீத வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். வி.சி.க. போட்டியிடக்கூடிய புதுச்சேரி உள்பட 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்."
இவ்வாறு அவர் கூறினார்.