இவிஎம் பாதுகாப்பை உறுதி செய்ய திருமாவளவன் வேண்டுகோள்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தகைள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில்,” மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பாதுகாப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெளிவான விதிகளை வகுத்திருக்கிறது. அந்த எந்திரங்கள் 2 பூட்டுகளால் பூட்டப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் சென்னை வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு சென்னை மாநகராட்சி ஊழியர் இருவர் இருசக்கர வாகனங்களில் எவ்வித பாதுகாப்பும் இன்றி வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டு சென்றுள்ளனர்.
அதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் அவை வாக்குப் பதிவு செய்யப்படாத எந்திரங்கள் என்றும் அவற்றை கவனக்குறைவாகக் கையாண்டதற்காக அந்த மாநகராட்சி ஊழியர்களை இடைநீக்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.இது ஏற்புடையதல்ல. வாக்குப்பதிவு எந்திரங்களை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மற்ற எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதைத் தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதி செய்யவேண்டும்.
அஸ்ஸாமில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பா.ஜ.க. வேட்பாளரின் காரிலேயே கொண்டுசெல்லப்பட்டதையும் அந்த காரை மடக்கிப் பிடித்ததற்காக பொதுமக்கள்மீதே வழக்கு போடப்பட்டிருப்பதையும் பார்த்தோம். அத்தகைய நிலை தமிழ்நாட்டில் ஏற்படக்கூடாது. அதற்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் விழிப்போடு இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியான முறையில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி வரை அவற்றைப் பாதுகாப்பதிலும் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தனிக்கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.