ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர் - வாக்களித்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டி
மாநிலம் முழுவதும் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது என்று வாக்களித்த பின்பு மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தி.மு.க. தலைவரும், தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.
பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின் கூறும்போது, “ குடும்பத்தோடு வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றியிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் மக்கள் அமைதியாக ஜனநாயக் கடமையை ஆற்றிக்கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் முடிவு மே 2ஆம் தேதி சிறப்பாக இருக்கும்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் திருப்தியும் இல்லை. அதிருப்தியும் இல்லை. தோல்வி பயம் காரணமாக தேர்தலை நிறுத்த அ.தி.மு.க.வினர் முயற்சித்தனர். ஆனால், அதற்கு தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது” இவ்வாறு அவர் கூறினார்.