தமிழக அரசை விமர்சிப்பதற்கு பதில் அவர்கள் தலைவர்களை பாஜகவினர் விமர்சித்திருக்கலாம்; கனிமொழி எம்.பி.,
தமிழக அரசை விமர்சனம் செய்யும் பாஜகவினர் அவர்கள் தலைவர்களை நோக்கி விமர்சனங்கள் செய்திருந்தால் நாடு காப்பாற்றப்பட்டிருக்கும் என கனிமொழி எம்.பி., குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகசிகாமணி நகர் மற்றும் இனாம்மணியாச்சி பகுதியில் உள்ள நியாயவிலைக்கடைகளில் தமிழக அரசின் கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணையாக ரூ 2000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியின் போது கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த சிறுமி ரிதானா தன் தந்தையின் மருத்துவ செலவிற்காக தான் சேமித்து வைத்திருந்த ரூ1970ஐ முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக கனிமொழி எம்பியிடம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு இன்னும் கவனத்தோடு அக்கறையோடு செயல்பட்டு, இப்பிரச்சனையை கையாண்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து. இந்த அளவுக்கு இழப்புகளை சந்தித்திருக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டை தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம் . தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் எல்லாத் துறைகளையும் முடுக்கிவிட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் அளவிற்கு, பாதிப்புக்களை எந்த அளவிற்கு குறைக்க முடியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகையில் உதவிகள் செய்ய முடியும் என்பதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து அரசு முழு மூச்சாக கொரோனா பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உழைத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று ஒருநாளில் பரவுவதில்லை. இதுவரை மாதக்கணக்கில் கொரோனா பரவலை தடுக்க எந்த நடவடிக்கை சரியாக எடுக்கப்படாமல், முன்னெச்சரிக்கையாக தொற்று பரவல் சூழ்நிலை வந்துவிட்டால் மருத்துவமனைகளை தயாராக வைக்காத சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே கொரோனா தொற்று பிரச்சினையை எப்படி கையாளுவது என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி இன்றைக்கு அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து செய்து கொண்டிருக்கிறார்.
ஒரே நாளில் நோய்த்தொற்று பரவலை நிறுத்திவிட முடியாது. ஆகையால் தான் தற்போது ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இத்தனை நாள் இலகுவாக இருந்த விதிமுறைகள் எல்லாம் தற்போது இன்னும் அதிகமாக கடுமையாக்கி உள்ளனர். மக்கள் வெளியே சென்றால் முக கவசம் அணிய வேண்டும், முடிந்தவரை வெளியே செல்லாமல் இருப்பது நம்முடைய பாதுகாப்புக்கு நல்லது. அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட வேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறது. முதல்வர் உள்பட முக்கியமானவர்கள் தடுப்பூசி போட்டு உள்ளனர்.
40 வயதுக்கு மேற்பட்ட நிச்சியமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு மக்களுக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. தடுப்பூசி போடுவதற்கு மக்கள் பயப்பட வேண்டியது இல்லை. நமக்கு பாதுகாப்பு என்பது தடுப்பூசி போட்டுக்கொள்வது, அதை செய்ய மக்கள் முன்வர வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் செல்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் 1745 கிராமங்களுக்கு நேரடியாக குழுக்கள் சென்று முகாமிட்டு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 36 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி போட வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 400 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில் ஆக்சிசன் இணைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது விமர்சனங்களுக்கு பதில் சொல்லக்கூடிய நேரம் இது கிடையாது. மக்களை காப்பாற்ற வேண்டிய நேரமிது. தமிழக அரசை விமர்சனம் செய்யும் பாஜகவினர் அவர்கள் தலைவர்களை நோக்கி விமர்சனங்கள் செய்திருந்தால் நாடு காப்பாற்றப்பட்டிருக்கும்,’’ என்றார்.