DMK MDMK Alliance: வைகோவின் மதிமுக-விற்கு 4 சீட்டு.. இறுதியானது தொகுதிப் பங்கீடு! திமுக ஹாப்பி அண்ணாச்சி!
DMK MDMK Alliance: திமுக-வின் கூட்டணியில் இடம்பிடித்துள்ள மதிமுக-விற்கு 4 தொகுதிகளை ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது தொகுதிப் பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. கூட்டணியில் இடம்பிடித்துள்ள மதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிமுக வரும் சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் திமுக-வின் உதயூசரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மதிமுக-வின் சின்னத்திலும் போட்டியிட உள்ளனர்.
2 தொகுதிகளை குறைத்த திமுக:
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாக திகழும் வைகோ கடந்த தேர்தல் முதல் திமுக-விற்கு பக்கபலமாக இருந்து வருகிறார். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக-விற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் பல கட்சிகளும் இருப்பதால் கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளின் எண்ணிக்கையே இந்த தேர்தலில் ஒதுக்க வேண்டும் என்று மதிமுக கோரிக்கை வைத்தது. ஆனால், இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் ஒதுக்கியதை காட்டிலும் 2 தொகுதிகளை குறைத்தே திமுக ஒதுக்கியுள்ளது.
என்ன சின்னம்?
மேலும், கடந்த தேர்தலில் 6 தொகுதிகளிலும் மதிமுக-வின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்திலே போட்டியிட்டனர். இந்த முறையும் 4 தொகுதிகளிலும் மதிமுக உதயசூரியன் சின்னத்திலே போட்டியிட திமுக தலைமை வலியுறுத்தியுள்ளது. ஆனால், தனிச்சின்னத்தில் போட்டியிடவே மதிமுக ஆர்வம் காட்டியது. இறுதியில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஒரு தொகுதியில் மட்டும் தனிச்சின்னத்தில் போட்டியிட திமுக தலைமை சம்மதம் தெரிவித்தது.
கடந்த முறை போட்டியிட்ட 6 தொகுதிகளில் அரியலூர், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் மற்றும் சாத்தூர் ஆகிய தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்த முறையும் அதே தொகுதிகள் ஒதுக்கப்படுமா? அல்லது வேறு தொகுதிகள் வழங்கப்படுமா? என்பது விரைவில் தெரிய வரும். மதிமுக-விற்கு செல்வாக்கு மிகுந்த 4 தொகுதிகள் அடங்கிய பட்டியலை மதிமுக திமுக தலைமைக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகிழ்ச்சியே:
கடந்த முறையை காட்டிலும் 2 தொகுதிகள் குறைவாக ஒதுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த வைகோ, சமரசம் செய்துகொள்ளவில்லை. 4 தொகுதிகள் ஒதுக்கியதில் மகிழ்ச்சியே என்று பதிலளித்தார். கூட்டணியில் காங்கிரசிற்கு 28 தொகுதிகள் ஒதுக்கியதாலும், கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதிமய்யம் ஆகிய கட்சிகள் இருப்பதாலும் அவர்களுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டியிருப்பதால் கூட்டணிய கட்சியினரிடம் தொகுதி பங்கீட்டில் திமுக கறார் காட்டி வருகிறது.
திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தற்போது வரை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக-விற்கு ஒரு ராஜ்யசபா தொகுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு அடுத்தடுத்த நாட்களில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என்று கருதப்புடுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















