EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை மக்கள் விரோத திமுக அரசு அகற்றப்பட வேண்டும். அதிமுக வேண்டுகோள் விடுப்பது பாஜக அல்லாத மற்ற கட்சிகளுக்கு தான்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த எமக்கல்நத்தம் கிராமத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாளுக்கு சொந்தமான புதிய திருமண மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக் குமார், தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் ஒரு திட்டமும் நடைபெறவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் வாயிலாக பொய்யான தகவலை தெரிவித்து வருகிறார் என்றார்.
மத்திய அரசு நாடு முழுவதும் வேளாண் நிலங்கள் நவீன டிஜிட்டல் முறைக்கு மாற்ற சர்வே பணி செய்ய நிதி ஒதுக்கி உள்ளது. இதில் தமிழகத்தில் வேளாண் மாணவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். படிக்க வந்த மாணவர்களை சர்வே பணிக்கு பயன்படுத்துவது கண்டனத்திறகுரியது. மாணவர்களை விடுவிக்க வேண்டும், மாணவர்கள் சர்வே பணியில் மாணவிகளுக்கு பாம்பு, விஷ பூச்சிகள் கடித்து உள்ளது. சர்வே பணியில் மாணவ மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டால் முதல்வர், துறை செயலாளர், அமைச்சர்கள் தான் பொறுப்பு என்று கூறினார்.
கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் இளைஞர் குத்தியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மருத்துவரை கத்தியால் குத்துவதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஓய்வு இன்றி பணியாற்றுபவர்கள் மருத்துவர்கள். மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும். கத்திக்குத்து சம்பவம் கண்டிக்கத்தக்கது. பொதுமக்கள் மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை மக்கள் விரோத திமுக அரசு அகற்றப்பட வேண்டும். அதிமுக வேண்டுகோள் விடுப்பது பாஜக அல்லாத மற்ற கட்சிகளுக்கு தான். இனியும் செய்தியாளர்கள் என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம் என்றார்.
அதிமுக செயற்குழு கூட்டங்களில் இளைஞர் வாக்குகளை அதிகரிக்க வேண்டும் என பேசப்படுகிறது தற்போது நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிய நிலையில் அதிமுகவில் உள்ள இளைஞர்கள் விஜய் கட்சிக்கு மாற வாய்ப்பு உள்ளதா என்கிற கேள்விக்கு., கற்பனையான கேள்வியை உருவாக்கி அதைக் கேட்பது எப்படி தேர்தல் வரும்போதுதான் யாருக்கு யார் வாக்களித்தார் என்பது தெரிய வரும். அதிமுகவை பொருத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் செல்வாக்கு உள்ள கட்சி, அதிமுக ஆட்சியில் தான் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதன் பிறகு எனது ஆட்சியிலும் அதிக திட்டங்களை கொண்டுவரப்பட்டு தமிழகம் இந்தியாவில் முதல் மாநிலமாக கொண்டுவரப்பட்டது. மக்களுக்கு யார் சேவை செய்கிறார்கள் என்று தெரியும். அதிமுக செல்வாக்கு உள்ள கட்சி என்பதை பலமுறை நாங்கள் நிரூபித்து காண்பித்துள்ளோம் நாடாளுமன்ற தேர்தலில் 2019 தேர்தலை விட ஒரு சதவீதம் வாக்குகள் அதிகம், பெற்றுள்ளோம். 2019ல் திமுக வாங்கிய வாக்குகளை விட 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஏழு சதவீதம் வாக்குகள் குறைவு என குறிப்பிட்டார்.