DMK IT Wing : திமுக ஐ.டி விங்கின் "திராவிட தடம்" நடைபயணம்..! எதற்காக தெரியுமா..?
தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக தி.மு.க. ஐ.டி. விங் அணியினர் திராவிட தடம் என்ற நடைபயணத்தை தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. ஆட்சியில் பேருந்தில் மகளிர் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தி.மு.க. ஆட்சியின் சாதனையை தி.மு.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், செப்டம்பர் மாதத்தை திராவிட மாதம் என கொண்டாடி வருகின்றனர் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி (ஐ.டி. விங்). இதையடுத்து, தி.மு.க. ஐ.டி. கட்சியினர் நீதிகட்சியின் தலைவர்களின் பெயர்களை கொண்ட பகுதிகளின் வழியே திராவிட தடம் என்ற நடைபயணம் தொடங்கியுள்ளது.
இந்த நடைபயணம் சென்னை, தி.நகரில் உள்ள பனகல்பூங்காவில் தொடங்கி உஸ்மான் சாலை , ஜி.என்.செட்டி சாலை , நாதமுனி தெரு, கலைவாணர் சிலை , தணிகாச்சலம் சாலை, பாண்டி பஜார், டாக்டர் நாயக்கர் சாலை, பாசுதேவ் தெரு, இந்தி பிரச்சார சபா, நடேசன் பூங்காவில் முடிவடைகிறது. இன்று காலை தொடங்கிய இந்த நடைபயணத்தை மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு , தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.