விசிக, காங்கிரஸூக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம்.. அவர் குழந்தையாக மாறிவிட்டார்.. அன்புமணி காட்டம்
பாமக நிறுவனர் ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து அன்புமணி பேசியிருக்கும் விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமகவில் அப்பா - மகனுக்கும் இடையே பனிப்போரே நடந்து வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் அண்மையில் அளித்த பேட்டியில் அன்புமணி ராமதாஸை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அவர் தலைவர் பொறுப்புக்கே தகுதியற்றவர் என்றும் அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது என் தவறு எனவும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அதேபோன்று கட்சியிலும் அதிரடி மாற்றங்களை எடுத்து வருவது அன்புமணிக்கு விரக்தியை அளித்துள்ளது. இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் விசிக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
விசிக, காங்கிரஸூக்கு திடீர் பாசம்
சென்னை பனையூரில் இன்று பாமக ஊடகப்பிரிவு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ், திமுக தான் பாமகவுக்கு எதிரி. நாம் திமுகவுக்கு எதிராகத்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும். ராமதாஸ் மீது விசிக, காங்கிரஸ் கட்சிகளுக்கு திடீர் பாசம் வந்தது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும், பேசிய அவர், விசிக தலைவர் திருமாவளவன் எப்போது ராமதாஸை புகழ்ந்து பேசியிருக்கிறார். இந்த திடீர் பாசத்தால் அடிக்கடி ராமதாஸை சந்திப்பது திமுகவின் சூழ்ச்சி இருக்கிறது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் மீது கடும் விமர்சனம்
கடந்த ஐந்து ஆண்டுகளாக ராமதாஸ், ராமதாஸாகவே இல்லை. அவரே எது சொல்லி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன். வயது முதிர்வு காரணமாக ராமதாஸ் குழந்தை போல் மாறிவிட்டார். தன்னுடன் இருக்கும் மூன்று பேரும் ஏமாற்றிவிடுவார்கள் என்று கூறியதால் தான் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாக தெரிவித்திருந்தால் நான் மறுப்பு தெரிவித்திருக்க மாட்டேன். இப்போது மாற்றி பேசுகிறார் என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
யாருக்கும் அதிகாரம் இல்லை
பாமக சட்டவிதிகளின்படி பொதுக்குழுவை நிறுவனர் வழிகாட்டுதலின்படி கூட்ட வேண்டுமே தவிர அதிகாரம் மிக்கவர் நிறுவனர் என்ற விதிகள் இல்லை. பொதுக்குழுவை கூட்டவும் கட்சியை நடத்தவும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. சிவி.சண்முகம் தைலாபுரம் தோட்டம் வந்து சென்றபோது அவர் எதற்காக வந்தார் என ராமதாஸிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் பத்திரிகை வைப்பதற்காக வந்து சென்றார் என என்னிடம் கூறினார். ஐயா சரி என்று சொன்ன பிறகுதான் பாஜகவுடன் கூட்டணி வைக்க ஒப்புக்கொண்டேன். அதன்பிறகே தைலாபுரத்தில் உணவு பரிமாறப்பட்டது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.





















