தர்மயுத்தம் செய்தவர், சதி வலையில் மீண்டும் விழமாட்டார்: ஆதிராஜாராமின் பரபரப்பு பேட்டி
அதிமுக தொண்டர்களின் இயக்கம். இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
"அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு. அதிமுக தொண்டர்களின் இயக்கம். இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்"
இது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி. இந்தப் பேட்டிதான் இப்போது தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக். அதிமுகவுக்கு சசிகலா மீண்டும் திரும்ப வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி ஆகியோர் திட்டவட்டமாகக் கூறிவர, ஓபிஎஸ்ஸுக்கு மட்டும் ஏதோ சாஃப்ட் கார்னர் இருக்கிறதோ என்ற சலசலப்புகள் எழுந்துள்ளன. இதனால், அதிமுகவின் சசிகலா மீதான நிலைப்பாடு தனி விவாதப் பொருளாகவே மாறியுள்ளது.
இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதி வேட்பாளராக அதிமுக அமைப்புச் செயலாளரும் அதிமுக தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளருமான ஆதிராஜாராம் பேட்டியளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஓபிஎஸ் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் தலைமைக் கழகம் சொல்லும் என்பதையே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். அதிமுகவில் மீண்டும் இணைந்த பின்னர் ஓபிஎஸ் டிடிவியை சந்தித்தார். அதனைக் கூட அரசியல் நாகரிகம் இல்லாமல் வெளியே சொன்னவர் டிடிவி. அது ஓபிஎஸ் அண்ணனுக்கும் தெரியும். அவரே தான் தர்மயுத்தம் நடத்தினார். சசிகலா மற்றும் கூட்டாளிகளால் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டேன் என்பதையும் சொன்னார். சசிகலா, டிடிவியை ஆதரித்துச் சென்ற 18 எம்எல்ஏக்கள் நிலை இன்று என்னவானது. அவர்களை நம்பிச் சென்றவர்களுக்கே அந்த கதி என்றால். அவர்களை விமர்சித்துக் கொண்டிருக்கும் நமக்கு என்ன நேரும் என்பது ஓபிஎஸ் அண்ணனுக்கு தெரியாமல் இருக்காது.
சசிகலா தன்னைத் தானே பொதுச்செயலாளர் என்று அறிவித்துக் கொண்டதற்கு கட்சியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்தை நம்பி மீண்டும் ஓபிஎஸ் அவரை அதிமுகவுக்குள் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறது. இந்த இயக்கம் தொண்டர்களால் நடத்தப்படும் இயக்கம். சென்னை மட்டுமல்ல எல்லா மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு எதிராகத் தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள்.
ஓபிஎஸ் கருத்து போகிற போக்கில் சொல்லப்பட்ட கருத்து. அதிமுகவின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை சசிகலாவை எதிர்ப்பார்கள். ஓபிஎஸ், எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்கவில்லை. அவர் தலைமைக் கழகம் முடிவெடுக்கும் என்றுதான் சொல்லியுள்ளார். சசிகலாவிடம் மீண்டும் சென்றால் அவர்கள் யாராக இருந்தால் ஏமாந்து போவார்கள், பொது வெளியில் அசிங்கப்பட்டுப் போவார்கள்.
ஓபிஎஸ் அன்பானவர், பாசமானவர் என்பதால் அவர் கடுமையான வார்த்தைகளால் சசிகலாவை நிராகரிக்கவில்லை. தர்மயுத்தம் செய்தவர் சதி வலையில் மீண்டும் விழமாட்டார்.
இவ்வாறு, ஆதிராஜாராம் தெரிவித்துள்ளார்.