ஐ.டி.ரெய்டில் ரூ.1.36 லட்சம் மட்டுமே இருந்தது - ஆர்.எஸ்.பாரதி
மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் குடும்ப செலவுக்காக ரூ.1.36 லட்சம் மட்டுமே இருந்ததாக வருமான வரி சோதனை தொடர்பாக ஆர்.எஸ். பாரதி விளக்கமளித்துள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை - மருமகன் சபரீசன் இல்லத்தில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 11 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்கு எதிர்க்கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் குடும்ப செலவுக்காக ரூ.1.36 லட்சம் மட்டுமே இருந்தது. துருவித் துருவி சோதனை செய்ததில் கிடைத்த அந்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். செந்தில் பாலாஜி வீட்டில் நடத்திய வருமான வரி சோதனையில் ரூ. 8 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளது” என்றார்.
மேலும், “அப்பழுக்கற்றவர்களாக அரசியலில் இருந்திருக்கிறோம். மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை. ஒரு கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக பாஜக அரசு இந்த சோதனையை நடத்தியுள்ளது. வருமானவரி சோதனைக்கு ஏற்பாடு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி” எனக் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

